பதிவு செய்த நாள்
12
மே
2022
10:05
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பெரிய தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா, கடந்த, 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு, பல்வேறு வாகனங்களில், சுவாமி புறப்பாடு நடைபெற்றது. நேற்று அதிகாலை, 5:45 மணிக்கு விநாயகர், சோமாஸ்கந்தர், அம்மன், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும், கரிவரதராஜ பெருமாளும் தேர்களுக்கு எழுந்தருளினர். காலை முதலே பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பெரிய தேர் சக்கரங்களுக்கு ஹைட்ராலிக் பிரேக் பொருத்துதல், வடக்கயிறு இணைக்கும் பணி முடிவுற்றது. இன்று காலை, 8:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தேருக்கு முன்னும், பின்னும் `புல்டோசர் உதவியுடன், பக்தர்கள் வடம் பிடித்து இருப்பம் மதியம் 1:00 மணிக்குள் தேர் வீதியில் உலா வரும் தேர், குலாலர் மண்டபத்தை ஒட்டியுள்ள ரோட்டின் ஓரத்தில் நிறுத்தப்படும்.
அன்னதானம் தாராளம்: தேர்த்திருவிழா அன்னதான கமிட்டி சார்பில், மேற்கு ரத வீதி, பூவாசாமி திருமண மண்டபம்; அவிநாசியப்பர் அன்னதான குழு சார்பில், தேவாங்கர் மண்டபம்; சுந்தரமூர்த்தி நாயனார் அன்னதானக்குழு சார்பில், செங்குந்தர் மண்டபம்; ஸ்ரீகருணாம்பிகை அன்னதான குழு சார்பில், கங்கவர் மண்டபம், கோவம்சத்தார் அன்னதான அறக்கட்டளை சார்பில், கோவம்ச திருமண மண்டபங்களில் அன்னதானம் வழங்கப்படும். அவிநாசி பேரூராட்சி மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் குடிநீர், நீர்மோர், பானகம், ஜூஸ் வழங்கப்படும்.
போக்குவரத்து மாற்றம்: திருப்பூர் ஈரோடு ரோடு வழியாக கிழக்கு நோக்கிச் செல்லும் வாகனங்கள், கால்நடை மருத்துவமனை, சேவூர் ராயம்பாளையம் வழியாக திருப்பிவிடப்படும். கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மேற்கு நோக்கிச் செல்லும் வாகனங்கள், மங்கலம் ரோடு, பைபாஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும். அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில், கோவில் வளாகம் மற்றும் தேரடி, நான்கு ரத வீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
நாளையும் தேரோட்டம்: நாளை காலை, 8:00 மணிக்கு, குலாலர் மண்டப சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள தேர், இழுத்து செல்லப்பட்டு, நிலை சேர்க்கப்படும். 13ம் தேதி, காலை, 8:00 மணிக்கு அம்மன் திருத்தேர் (சின்ன தேர்) வடம் பிடித்து நிலை சேர்க்கப்படும். இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின், தேரோட்டம் நடத்தப்படுவதால், பக்தர்கள் ஆர்வ மிகுதியில் உள்ளனர்.