பதிவு செய்த நாள்
14
மே
2022
03:05
ஆத்துார்: முத்துமலை முருகனை தரிசித்த, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு, கோவில் நிர்வாகம், 5 அடி உயர வெள்ளி வேலை வழங்கியது. பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில், 146 அடி உயரத்தில் சுவாமி உள்ளது. அங்கு கடந்த, 6ல் கும்பாபிேஷகம் செய்யப்பட்டு, தினமும் மண்டல பூஜை நடக்கிறது. நேற்று, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சார்பில் மண்டல பூஜை நடந்தது. அதில் மாடு, குதிரை, ஒட்டகம், பசு மாடுகளுடன், பழனிசாமி, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் உள்ளிட்டோர், கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து யாக பூஜை செய்து, முருகன் சிலையின் கையில் இருக்கும் வேல் மீது, முதல் முறை பால் ஊற்றும் நிகழ்வு நடந்தது. பழனிசாமி, அவரது மனைவி ராதா, மகன் மிதுன் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர். பின், முத்துமலை முருகனுக்கு வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடந்தது. இரவு, மூலவர் முருகனுக்கு தீபாராதனை நடந்தது. இதையடுத்து, சுவாமி முன் பூஜை செய்து, 5 அடி உயரத்தில் வெள்ளியால் செய்த வேலை, கோவில் நிர்வாகி ஸ்ரீதர், பழனிசாமியிடம் வழங்கினார். இரவு, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, சண்முகம், பரஞ்ஜோதி, எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.