சிவபக்தனான மார்க்கண்டேயனுக்கு வயது பதினாறு ஆனது. தன் ஆயுள் முடியப் போவதை உணர்ந்து சிவன் கோயிலுக்குள் ஓடினான். சிவலிங்கத்தை கைகளால் அணைத்துக் கொண்டான். இருந்தாலும் அவன் மீது பாசக்கயிறை வீசினான் எமன். அது சிவலிங்கத்தின் மீது விழுந்தது. கோபத்தால் எமனைக் காலால் உதைத்ததோடு அவனது பதவியை பறித்து சாதாரண மனிதனாக திரிய சாபமிட்டார் சிவன். பூலோகம் வந்த எமன் விமோசனம் பெற வேண்டி ஓரிடத்தில் சிவலிங்கம் அமைக்க விரும்பினான். பூஜைக்காக தீர்த்தம் உண்டாக்க பூமியைத் தோண்டினான். அப்போது நுரையுடன் தண்ணீர் பொங்கியது. மணலையும், நுரையையும் சேர்த்து சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டை செய்தான். நேரில் காட்சியளித்த சிவன் மீண்டும் எமலோகத்தின் தலைவனாக்கினார். இதனடிப்படையில் ‘காலகாலேஸ்வரர்’ என்று சிவன் பெயர் பெற்றார். இவரது கோயில் கோயம்புத்துார் – சத்தியமங்கலம் சாலையில் 20 கி.மீ., துாரத்தில் உள்ள கோயில்பாளையத்தில் உள்ளது. ஆயுள் நீடிக்கவும், இழந்த பதவியைப் பெறவும் பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர்.