திருக்கோஷ்டியூர் கோயிலில் பிரமோத்ஸவம்: சித்திரை தேரோட்டம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2022 08:05
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடந்த சித்திரைத் தேரோட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. நேறறு இரண்டாம் நாளாக தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேர் நிலைக்கு வந்து நிறைவு பெற்றது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மே 5ல் கொடியேற்றி பிரமோத்ஸவம் துவங்கியது. பத்தாம் திருநாளாக நேற்று முன்தினம் தேரோட்டத்தை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியருடன் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தேரில் எழுந்ருளிய சுவாமிக்கு அர்ச்சனை செய்து, வலம் வந்து வழிப்பட்டனர். மாலை 5:00 மணிக்கு பட்டமங்கலம், மயில்ராயன்கோட்டை நாட்டா் வந்து தேர்வடம் பிடித்து தேரோட்டம் துவங்கியது. இருப்பினும் கனத்த மழையால் தேரோட்டம் சிறிது துாரம் சென்றவுடன் நிறுத்தப்பட்டது. உற்ஸவர் தேரில் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
நேற்று காலை நாட்டார்கள் வருகைக்குப் பின் காலை 10:05 மணிக்கு தேரோட்டம் மீண்டும் துவங்கியது. தொடர்ந்து கோயிலைச் சுற்றிலும் உள்ள ரதவீதிகளில் தேர் வலம் வந்து ஒன்றரை மணி நேரத்தில் நிலைக்கு வந்தது. பின்னர் உற்ஸவர் புழுதி நீக்கி மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அபிஷேகம், சாத்துமுறை, கோஷ்டி நடந்தது. மாலையில் உற்ஸவர் தேர் தடம் பார்த்தல் நடந்தது. தொடர்ந்து நாளை பிரணயகலகம், மாலை பஷ்பயாகம் வாசித்தல், சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளல் நடைபெறும். மே 17 ல் 12ம் திருநாளை முன்னிட்டு இரவில் புஷ்பப்பல்லக்கு நடைபெற்று பிரமோத்ஸவம் நிறைவடையும்.