சூலூர்: சூலூர் வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் திருச்சி ரோட்டுக்கு அருகில் உள்ள ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவில் பழமையானது. புதுக்குடியார் கூட்டம் அகமுடையார் ராஜ குல மக்களுக்கு பாத்தியப்டடது. இங்கு வர்ணம் தீட்டும் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்து, நேற்று முன் தினம் மாலை கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, வாஸ்து பூஜை, காப்புக் கட்டுதல், கும்பஸ்தாபனம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. முதல் கால ஹோமம் மற்றும் பூர்ணாகுதி முடிந்து, விமான கலசங்கள் நிறுவப்பட்டன. அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து இடப்பட்டது. நேற்று காலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால ஹோமம் முடிந்து, புனித நீர் கலசங்கள், மேள தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. 8:00 மணிக்கு விமானத்துக்கும், 8:15 மணிக்கு, ஸ்ரீ வீரமாத்தி அம்மனுக்கும், தொடர்ந்து பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.