பதிவு செய்த நாள்
17
மே
2022
05:05
சென்னை, : காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில், வேதபாராயணம் வாசிப்பது தொடர்பாக, அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், முந்தைய நிலை தொடர, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடப்பதை ஒட்டி, இம்மாதம் 14ம் தேதி, அறநிலையத்துறை உதவி
ஆணையர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.கோவில் வேதபாராயணத்தில் 30 பேரும், திவ்யபிரபந்த கோஷ்டிகளில் உரிமை பெற்றவர்கள் 10 பேரும், சாதாரண வழிபாட்டாளர்கள் 10 பேரும் கலந்து கொள்ள வேண்டும்.நீதிமன்ற தீர்ப்பின்படி, வடகலை பிரிவினர் திவ்யபிரபந்த கோஷ்டிகளில் முதல் இரண்டு வரிசைகளில் வரக் கூடாது. தேசிக பிரபந்தம் பாடக்கூடாது.இவ்வாறு அந்த உத்தரவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன
.உதவி ஆணையரின் உத்தரவை எதிர்த்து, சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், தாக்கல் செய்த மனு:பிரபந்தம் பாடவும், சடங்குகளில் பங்கேற்கவும், வடகலை பிரிவினருக்கு உள்ள உரிமைகள், இந்த உத்தரவால் பாதிக்கப்படுகிறது. உரிய சந்தர்ப்பம் அளிக்காமல், இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். இதுகுறித்த வழக்கு நிலுவையில் இருந்தும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வடகலை பிரிவினர் அல்லாமல், தென்கலை பிரிவினர் மட்டுமே மந்திரங்களை பாடலாம் என்பது, சட்டப்படி சரியானது அல்ல. ஒரு பிரிவினருக்கு அனுமதி வழங்குவதும், அடுத்த பிரிவினருக்கு மறுப்பதும், பாரபட்சம் காட்டுவதாகும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, அவசர வழக்காக, நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வழக்கை நேற்று விசாரித்தார்.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால், அறநிலையத்துறை இப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியாது.
அதுவும், ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, ஏற்கனவே இருந்த நிலை தொடர உத்தரவிட வேண்டும், என்றார்.அறநிலையத்துறை சார்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், பிரச்னைகள் வரக்கூடாது என்பதற்காக, ஒழுங்குபடுத்தும் முறையிலே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, என்றார். இதையடுத்து, நீதிபதி ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதேநேரத்தில், ஒருவரை அனுமதித்து, மற்றொருவரை மறுப்பது, பாரபட்சம் காட்டுவது போலாகும். இரண்டு பிரிவினரும் பெருமாளை வணங்குகிறவர்கள் தான். அரசு, நடுநிலையோடு இருக்க வேண்டும் என்றார்.அதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்து, அறநிலையத்துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பிக்கும் முன் உள்ள நிலையே தொடர வேண்டும் என, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டார்.