பதிவு செய்த நாள்
18
மே
2022
04:05
சென்னை : காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், வேதபாராயணம் வாசிக்க, வடகலை பிரிவினரை அனுமதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திராவிட பிரபந்தம் என்றழைக்கப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை அனைவரும் வாசிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடப்பதை ஒட்டி, இம்மாதம் 14ம் தேதி, அறநிலையத்துறை உதவி ஆணையர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
கட்டுப்பாடுகள்வேதபாராயணத்திற்கு 30 பேர்; திவ்யபிரபந்த கோஷ்டிகளில் உரிமை பெற்றவர்கள் 10 பேர்; சாதாரண வழிபாட்டாளர்கள் 10 பேர் பங்கேற்க வேண்டும்; நீதிமன்ற தீர்ப்பின்படி, வடகலை பிரிவினர் திவ்யபிரபந்த கோஷ்டிகளில் முதல் இரண்டு வரிசைகளில் வரக் கூடாது; தேசிக பிரபந்தம் பாடக்கூடாது என்பவை உள்ளிட்ட கட்டுப்பாடுகள், அதில் விதிக்கப்பட்டிருந்தன.உதவி ஆணையரின் உத்தரவை எதிர்த்து, சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:பிரபந்தம் பாடவும், சடங்குகளில் பங்கேற்கவும், வடகலை பிரிவினருக்கு உள்ள உரிமைகள், இந்த உத்தரவால் பாதிக்கப்படுகிறது.
தென்கலை பிரிவினர் மட்டுமே மந்திரங்களை பாடலாம் என்பது சட்டப்படி சரியானது அல்ல. ஒரு பிரிவினருக்கு அனுமதி வழங்குவதும், அடுத்த பிரிவினருக்கு மறுப்பதும், பாரபட்சம் காட்டுவதாகும். எனவே, உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:கோவில் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த, அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. அதேநேரம், வடகலை, தென்கலை பிரிவினரின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்; அவர்களுக்குள் பரஸ்பர மரியாதை இருப்பதும் முக்கியம்.இரு பிரிவினரும், வரதராஜ பெருமாளை வழிபடுகின்றனர். ஆனால், சாதாரண விஷயங்களுக்காக, சடங்குகள் பின்பற்றப்படுவதில் தொடர்ந்து இடையூறு ஏற்படுகிறது. இதனால், இரு பிரிவையும் சேராத சாதாரண பக்தர்களுக்கு, அசவுகரியங்கள் ஏற்படுகின்றன.
திராவிட வேதம்தமிழ் மறை அல்லது திராவிட வேதம் அல்லது திராவிட பிரபந்தம் என, நாலாயிர திவ்ய பிரபந்தம்வர்ணிக்கப்படுகிறது. தமிழ் மொழியில் பிரபந்தம் இருந்தாலும், தமிழர்கள் மட்டுமின்றி கன்னடர், தெலுங்கரும் பாடுகின்றனர். அதனால் தான், இதை திராவிட வேதம் என வர்ணிக்கின்றனர்.எனவே, கோவிலுக்குள் முதல் மூன்று வரிசையில் தென்கலை பிரிவினர்; அவர்களின் பின் வடகலை பிரிவினர் மற்றும் சாதாரண பக்தர்கள் அமர அனுமதிக்க வேண்டும். அதை, உதவி ஆணையர் ஒழுங்குபடுத்த வேண்டும்.முதலில், தென்கலை பிரிவினர் ஸ்ரீசைல தயாபத்ரத்தை வாசிக்க வேண்டும்;
அதன்பின், 10 முதல் 12 வினாடிகள் வரை, ராமானுஜ தயாபத்ரத்தை வாசிக்க, வடகலை பிரிவினரை அனுமதிக்க வேண்டும்.அதைத்தொடர்ந்து, தென்கலை, வடகலை பிரிவினர் மற்றும் பக்தர்கள் இணைந்து, நாலாயிர திவ்ய பிரபந்தத்தை, பூஜை மற்றும் சடங்குகளுக்கு இடையூறின்றி பாடஅனுமதிக்க வேண்டும்.வீடியோ பதிவுநாலாயிர திவ்ய பிரபந்தத்தை அனைவரும் சேர்ந்து பாடி முடித்த பின், மணவாள மாமுனிகள் வாழி திருநாமத்தை தென்கலை பிரிவினரும், அதன்பின், தேசிகன் வாழி திருநாமத்தை வடகலை பிரிவினரும் பாட அனுமதிக்க வேண்டும்.
தென்கலை, வடகலை பிரிவினர் இந்த சடங்குகளை பின்பற்றுவதை, உதவி ஆணையர் மேற்பார்வையிட வேண்டும். இதில் பிரச்னை எழுந்தால், சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். இந்த நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்து, வரும் 25ம் தேதி, உதவி ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிஉத்தரவிட்டுள்ளார்.
இலுப்பையூரில் 10 ம் நூற்றாண்டு முற்கால பாண்டியர் நடுகல் கண்டுபிடிப்பு
திருச்சுழி : விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இலுப்பையூரில் கி.பி., 9, 10 ம் நுாற்றாண்டு முற்கால பாண்டியர் நடுகல் முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வரலாற்றுத்துறை பேராசிரியர் விஜயராகவன் தலைமையில் மாணவர்கள் ராஜபாண்டி, சரத்ராம் இப்பகுதியில் ஆய்வு செய்த போது இக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
பேராசிரியர் விஜயராகவன் கூறியதாவது: இக்கல் 6 அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்டது. கல் மேல் பகுதியில் 11 வரிகள் கொண்ட, வட்டெழுத்து கல்வெட்டு காணப்படுகிறது. ஓய்வு பெற்ற தொல்லியல் துறை இயக்குனர் சாந்தலிங்கம் உதவியுடன் வட்டெழுத்து படிக்கப்பட்டது. கல்வெட்டில் இடது பாதி முற்றிலும் சிதைந்து, வலது பாதியில் மட்டும் எழுத்துக்கள் உள்ளன. இரு ஊர்களுக்கு இடையே ஏற்பட்ட பூசலில் புல்லன் சாத்தன் என்ற வீரர் ஒரு ஊரை வென்று, போரில் உயிர் நீத்தார் என கல்வெட்டு கூறுகிறது.
இதுவரை பாண்டியநாட்டில் கி.பி., 10 ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து நடுகற்கள் 2 மட்டுமே கிடைத்துள்ளன. அதில் ஒன்று தற்போது கண்டறியப்பட்ட இலுப்பையூர் கல்வெட்டு. மற்றொன்று இந்தஊருக்கு தெற்கில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் நீராவி அருகிலுள்ள கரிசல்குளத்தில் கண்டறியப்பட்டது. அந்த நடுகல் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து சென்ற போது எதிர்த்து போரிட்டு உயிர் நீத்த வீரனுக்கு நடப்பட்ட நடுகல் ஆகும்.விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை ராஜபாளையம் அருகில் முதுகுடியில் பிற்கால பாண்டியரின் நடுக்கல் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.