பதிவு செய்த நாள்
18
மே
2022
04:05
பவானிசாகர்: பூனையை உயிருடன் மணலால் மூடி, பொலி காளையை இழுத்து வழிபடும் வினோத விழா, பவானிசாகர் அருகே நடந்தது. பவானிசாகரை அடுத்த கோடேபாளையம், கொல்லாப்பூர் மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு கம்பம் விழா, கடந்த, 13ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு பொலி காளை இழுத்தல் நிகழ்ச்சி, கோவில் மைதானத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடந்தது. மாடுகள் நலம் பெற, விவசாயம் செழிக்க, இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
முன்னதாக மூங்கில் குச்சியை ஏந்திபடி, கோவில் முன் இளைஞர்கள் திரண்டனர். மேள தாளத்துடன் சென்று ஊர் பெரியவரை மாலை அணிவித்து அழைத்து வந்தனர். அதை தொடர்ந்து கோவில் முன் கம்பம் நடப்பட்ட இடத்தில், குழி தோண்டினர். அதில் பூனைக்குட்டியை உயிருடன் வைத்து, சிறப்பு பூஜை செய்து, மணல் நிரப்பி மூடினர். பூனைக்குட்டியை மூடிய இடத்தில், அலங்கரிக்கப்பட்ட காளைகளை நிற்க வைத்து, சிறப்பு பூஜை செய்தனர். காளைகளை படுக்க வைத்து அந்த இடத்தை மூன்று முறை சுற்றி இழுத்தனர். இந்த வினோத விழாவைக் காண, ஆயிரக்கணக்கான மக்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். குழியில் வைத்து மூடப்பட்ட பூனைக்குட்டியை, 5 மணி நேரத்துக்குப் பின் மீட்டபோது, உயிருடன் ஓடியது. இதனால் ஊர் செழிப்பாக இருக்கும். இந்த ஐதீக விழா ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பதாக, ஊர் மக்கள் தெரிவித்தனர்.