தேர்த் திருவிழாவில் இரு பிரிவினரிடையே மோதல் தேரின் முன் அமர்ந்து போராட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2022 03:05
காரைக்குடி: காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் தேர்த் திருவிழாவில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டது.
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. அன்று இரவு காட்டம்மன் கோயிலில் தங்கி மறுநாள் காலை தேர், கோயிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருவர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினர் நேற்று காலை தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேரின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பா.ஜ., முன்னாள் தேசியச் செயலாளர் எச் ராஜா சம்பவ இடத்திற்கு வந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். டி.எஸ்.பி., வினோஜி, தாசில்தார் மாணிக்கவாசகம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து தேரை இழுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
டி.எஸ்.பி., வினோஜி கூறுகையில்: நேற்று முன்தினம் இரவு இரு தரப்பினரிடையே பிரச்சனை நடந்துள்ளது. இதனால் தேர் கோயிலுக்கு திரும்புவதில் சிக்கல் நிலவியது. பாதிக்கப்பட்டவர்களை சமாதானம் செய்து தேரை இழுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். என்றார்.