அன்னூர்: கடத்தூர் மாரியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. காட்டம்பட்டி ஊராட்சி, கடத்தூர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு, திருக்கல்யாண திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. கடந்த 11ம் தேதி இரவு கம்பம் நடும் வைபவம் நடந்தது. தினமும் இரவு பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடுதலும், அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் நடந்தது.
நேற்று முன்தினம் மாரியம்மனுக்கு அணிகலன் மற்றும் அணிக்கூடை எடுத்து வரும் வைபவமும், இரவு அம்மன் அழைத்தலும் நடந்தது. நேற்று அதிகாலையில் பக்தர்கள் பூங்கரகம் எடுத்து வந்தனர். கோயில் வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டது. அம்மன் திருக்கல்யாணமும், மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மதியம் பட்டத்தரசி அம்மன் கோவிலிலிருந்து எருதுகள் ஊர்வலம் நடக்கிறது. நாளை (21ம் தேதி) காலையில் கரகங்களை கங்கையில் விடுதலும், மஞ்சள் நீராட்டும், சுவாமி திருவீதி உலா வருதலும் நடக்கிறது.