பதிவு செய்த நாள்
20
மே
2022
10:05
புதுடில்லி,-உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
அதுவரையிலும் இந்த வழக்கில் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது என, வாரணாசி நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வாரணாசியில் உலகப் புகழ் பெற்ற விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை ஒட்டியுள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள ஹிந்துக் கடவுள் சிருங்கார கவுரி சிலையை தினமும் வழிபட அனுமதி கோரி, ஹிந்துப் பெண்கள் சிலர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து, ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதை, வீடியோவாக பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. கள ஆய்வின்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு, நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சூர்ய காந்த், பி.எஸ்.நரசிம்மா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹிந்துப் பெண்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் சில காரணங்களால் ஆஜராக இயலாதது குறித்து தெரிவிக்கப்பட்டது
.இதையடுத்து, இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக அமர்வு கூறியுள்ளது. அதுவரை இது தொடர்பான வழக்கில் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது என, வாரணாசி நீதிமன்றத்துக்கு, உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையே, வாரணாசி நீதிமன்றம் நியமித்த குழு, தான் நடத்திய கள ஆய்வு தொடர்பான அறிக்கையை, நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளது. இப்போது தான் சில உண்மைகள் வெளியில் வரத் துவங்கியுள்ளன. எல்லா உண்மைகளும் வெளியாக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். உண்மையை எத்தனை நாளைக்குத் தான் மறைக்க முடியும். கண்டிப்பாக ஒரு நாள் வெளியில் வந்தே தீரும். சுனில் அம்பேத்கர்மக்கள் தொடர்பாளர், ஆர்.எஸ்.எஸ்.,
நடிகை கருத்து: பல்வேறு விஷயங்களில், வெளிப்படையாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் கருத்து தெரிவித்து வரும், பிரபல பாலிவுட் நடிகை, கங்கனா ரனாவத், காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று வழிபட்டார். அப்போது அவர் கூறியதாவது:மதுராவில் உள்ள அனைத்திலும் பகவான் கிருஷ்ணர் அடங்கியிருக்கிறார். அயோத்தியில் ஹிந்துக் கடவுள் ராமர் வியாபித்துள்ளார். அதுபோல, காசியின் ஒவ்வொரு துகளிலும் சிவபெருமான் இருக்கிறார். அவருக்கு தனியாக எந்த கட்டடமும் தேவையில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.