ராமநாதபுரம் : பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் 93வது மகா குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.
தென் தமிழகத்தின் புண்ணியத்தலமான இராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள பாம்பன் என்னும் சிற்றூரில் சிவத்திரு சாத்தப்பப்பிள்ளை, செங்கமல அம்மாள் ஆகியோருக்கு அருந்தவப் புதல்வனாக கி.பி 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பாம்பன் சுவாமிகள் பிறந்தார். சிவக்கொழுந்தாகத் தோன்றிய திருக்குழந்தைக்கு அப்பாவு என பெயர் சூட்டி மகிழ்ந்தனர். முனியாண்டியாப் பிள்ளை என்பாரிடம் தமிழ்க்கல்விப் பயின்றார். பள்ளிக் கல்வியுடன் முறையாகத் தமிழ்மொழியும் வடமொழியும் நன்கு கற்றுத் தேர்ந்தார். கருவிலே திருவாய்க்கப்பெற்ற சுவாமிகள் இளம் பருவத்திலேயே குமரக்கடவுள் மீது மாறா பக்தி கொண்டு வணங்கினார்.
1926-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 அன்று உயில் எழுதி மகா தேஜோ மண்டலசபை அமைப்பு நடைமுறையை ஏற்படுத்தினார். மே 30 , 1929 அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் இராமேஸ்வரத்தில் உள்ள பாம்பனில் சமாதியடைந்தார்கள். பின்னாளில் சுவாமிகள் சீடரால் திருவான்மியூரில் சமாதி அமைக்கப்பட்டது. பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் 93வது மகா குருபூஜை விழா பிரப்பன் வலசையில் இன்று(21ம் தேதி) சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.