தருமை ஆதீன குருமுதல்வர் குருபூஜை, பட்டினப்பிரவேசம் விழா- 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2022 05:05
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் குருமுதல்வர் குருபூஜை மற்றும் பட்டின பிரவேசம் விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக தருமை ஆதீன குருமகா சன்னிதானம் தெரிவித்தார்.
மயிலாடுதுறை தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில் பழமைவாய்ந்த ஞானம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஆண்டு பெருவிழா மற்றும் குருபூஜை, பட்டணப் பிரவேச விழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 11 நாள் உற்சவமாக நடைபெற்று வருகிறது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தருமபுரம் ஆதீன குருமுதல்வர் குருபூஜை விழாவை முன்னிட்டு 9ம் திருநாள் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து குருஞானசம்பந்தரின் குருவான ஞானப்பிரகாசரின் குருபூஜை திருநாள் நடைபெற உள்ளது. காலை சவாரி பல்லக்கில் எழுந்தருளி மேல குரு முகூர்த்தத்தில் 5 குருமூர்த்தி களில் குரு பூஜை வழிபாடு, தொடர்ந்து சொக்கநாதர் வழிபாடு, ஞானசம்பந்தருக்கு அபிஷேகம், சிவ பூஜை, கோ பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளன. குருபூஜையை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. 22ஆம் தேதி இரவு பட்டிணப் பிரவேச நிகழ்வு நடைபெறும். பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீன குருமகா சன்னிதானங்கள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்தார்.