பதிவு செய்த நாள்
24
மே
2022
09:05
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் மற்றும் தில்லை காளியை விமர்சனம் செய்து ‘யூ டியூப்’ சமூகவலை தளத்தில் ‘ வீடியோ ’ வெளியிட்டவரை கைது செய்ய வலியுறுத்தி, சிதம்பரத்தில் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் மற்றும் தில்லை காளியின் நடனத்தை, ‘மைனர்’ விஜய் என்பவர் விமர்சனம் செய்து, யூ டியூப் சமூகவலை தளத்தில் கடந்த மாதம் வீடியோ வெளியிட்டார். இது, ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரை கைது செய்ய வலியுறுத்தி, ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், சிவனடியார்களும் தொடர் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில், சிவனடியார்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரத்தில் நேற்று நடந்தது. போல் நாராயணபிள்ளை தெ ருவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலம் முழுவதும் இருந்து, ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருக்கழுக்குன்றம் திருவாசகசுவாமி சிவதாமோதரன் தலைமை வகித்தார். திருவாரூர் உலக ஆன்மிக சங்கமம் நடராஜசுவாமிகள், சென்னை திருமடம் பாதவூர் அடிகளார். உ.பி., காசியாபாத்தில் இருந்து நாராயணன்ஜி, ஹிந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.