பதிவு செய்த நாள்
25
மே
2022
10:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவம், விடையாற்றி உற்சவத்தின் நிறைவு நாளான இன்று இரவு, புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த, 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடந்து, 10 நாட்கள் நடந்த உற்சவத்தில் வரதராஜ பெருமாள் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பல்வேறு வீதிகள் வழியாக வீதியுலா சென்று வந்தார். இதில், பிரபல உற்சவமான கருடசேவை உற்சவம் கடந்த 15ம் தேதியும், தேரோட்டம், 19 ம் தேதியும் நடந்தது. இரு உற்சவத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கடந்த, 22ல் இரவு வெட்டிவேர் சப்பரத்துடன் கொடி இறக்கப்பட்டு, வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. அதைதொடர்ந்து, மூன்று நாட்கள் நடைபெறும் விடையாற்றி உற்சவம் கடந்த 23ல் துவங்கியது. கடந்த இரு நாட்களாக விடையாற்றி உற்சவத்தையொட்டி பெருமாள் திருவடிகோவில் புறப்பாடு நடந்தது. இதில் காலை, 11:00 மணிக்கு, நுாறுகால் மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், திருமஞ்சனம் நடந்தன.
விடையாற்றி உற்சவத்தின் நிறைவு நாளான இன்று மாலை 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், சன்னதி தெரு, குறுக்கு தெரு, அண்ணா தெரு, நான்கு மாட வீதி, ஆணை கட்டி தெரு வழியாக வீதியுலா சென்று மீண்டும் சன்னதி வந்தடைந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து சுவாமியை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.