பதிவு செய்த நாள்
27
மே
2022
09:05
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வடம் பிடிக்க, தேரோட்டம் துவங்கியது.
பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 9ம் தேதி திருத்தேர் முகூர்த்தக்கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து பூச்சாட்டு விழா, கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.கோவிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதுடன், காலை மற்றும் இரவு நேரங்களில் அம்மன் சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நேற்றுமுன்தினம் மாவிளக்கு, பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள், அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று, காலை, 5:00 மணிக்கு மாரியம்மன், விநாயகர் திருத்தேருக்கு புறப்படுதல், மாலை, 5:05 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
தேரோட்டத்தையொட்டி, 36 அடி உயரம் உள்ள தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்திலும், 15 அடி உயரம் உள்ள தேரில், விநாயகப்பெருமான் சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.
பக்தர்கள் வடம் பிடிக்க, தேரில் அம்மன் பவனி வந்து அருள்பாலித்தார். பக்தர்கள் வாழைப்பழம் சூறை விட்டு வழிபட்டனர். தேருக்கு பின்னால் வந்த பக்தர்கள், மரக்கட்டையால் தேர் சக்கரத்துக்க முட்டுக்கொடுத்து தள்ளினர். தேரோட்டத்தில், சரவணம்பட்டி கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், புரவிபாளையம் ஜமீன் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பன்ன மன்றாடியார், தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இன்று மாலை இரண்டாம் நாள் தேரோட்டமும், நாளை மாலை மூன்றாம் நாள் தேரோட்டமும், அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார ஆராதனையும் நடக்கிறது.