பதிவு செய்த நாள்
27
மே
2022
08:05
திண்டுக்கல், திண்டுக்கல் சிலுவத்துாரில் 12 ம் நுாற்றாண்டை சேர்ந்த வாள் வீரன் நடுகல் கண்டெடுக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர் விஸ்வநாததாஸ், தளிர் சந்திரசேகர், வரலாறு மாணவர் ரத்தினமுரளிதர் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: அம்மாபட்டியை சேர்ந்த கோபால் சிலுவத்துாரில் வாள்வீரன் நடுகல் இருப்பதாக கூறினார். சென்று பார்த்தபோது உயரம் 4 அடி, அகலம் 3 அடியுடன் அரை அடி தடிமனும் கொண்ட நடுகல் இருந்தது. வீரனின் வலது கை வாளை நீட்டி பிடித்தபடியும், இடது கை வாளுக்கு இணையாக கையை நீட்டியபடி உள்ளது.வீரனின் இடையில் இடைவாரில் இருந்து குறுவாள் தொங்கியபடியும், இடுப்பில் இருந்து முழங்கால் வரை இடைகச்சு ஆடையும், ஆடையை சுற்றி உதரபந்தம் எனும் இடைசுற்று ஆடையும் உள்ளது. தோளில் லாகு வளையம், காலில் தண்டை ,கழுத்தில் வீர சங்கிலி உள்ளது. இவ்வீரனின் செய்கை போர்களத்தில் முன் நின்று எதிரி வீரர்கள் வேகத்தை தடுப்பவராக இருக்கிறது. இந்த நடுகல்லை இங்குள்ள மக்கள் கள்ளப்பன் எனும் இறைவனாக வழிபடுகின்றனர். ஆடை, சிலை அமைப்பு 12 ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக உள்ளது.
பாண்டியர் கால கோயில் : வாள் வீரன் நடுகல்லில் இருந்து 3 கி.மீ., தொலைவில் தோட்டனுாத்தில் பெரிய குளத்தின் நடுவில் ஒரு நடுகல் உள்ளது. அதில் ஆண், பெண் உருவமும், இரு ஓரங்களிலும் சிறுவர், சிறுமியர் உருவமும் உள்ளது. இந்த நடுகல்லில் இருந்து சிறிது தொலைவில் பிற்கால பாண்டியர் கட்டிய சிவன் கோயில் உள்ளது. நடுகல்லில் இருப்பவர்கள் கோயிலை கட்டிய கொடையாளர்கள். இதுவும் 12ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல் ஆகும், என்றனர்.