பதிவு செய்த நாள்
27
மே
2022
06:05
வில்லிவாக்கம் : வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோவிலில் இன்று, திருத்தேர் உற்சவம் நடக்கிறது.
வில்லிவாக்கத்தில் உள்ள, சவுமிய தாமோதர பெருமாள் கோவில், 800 ஆண்டுகள் பழமைவாய்ததது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி பெருவிழாவை ஒட்டி, பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.அதன்படி, இந்தாண்டு வைகாசி பெருவிழா, கடந்த 19ல் துவங்கியது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் உற்சவர் தாமோதர பெருமாள் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு நடந்த ஆறாம் நாள் உற்சவத்தில் சுவாமி அனுமந்த வாகனத்தில் வீதியுலா வந்தார். தொடர்ந்து நேற்று காலை கேடயம் சூர்ணாபிஷேகம், மாலை யானை வாகன உற்சவத்திலும் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கும் திருத்தேர் உற்சவம், இன்று அதிகாலை 4:00 மணி முதல் 5:00 மணிக்குள் நடைபெறுகிறது என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.