பதிவு செய்த நாள்
27
மே
2022
06:05
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வடக்கு பகுதி வெளிப்புற சுவரில் செடிகள் வேரூன்றி வளர்ந்து வருவதால், சுவரின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில் பிரதான கோவிலான ஏகாம்பரநாதர் கோவில், 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.பஞ்ச பூத தலங்களில், மண் தலமாக இக்கோவில் விளங்குகிறது. இங்குள்ள மூலவர் லிங்கம், மணலால் உருவாக்கப்பட்டது. தொண்டைநாட்டு திருமுறைத் திருத்தலம், 32ல், இக்கோவில், 18வது திருத்தலமாக விளங்குகிறது.பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இருப்பினும்,இக்கோவில் சுவர் பகுதியை கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், வடக்கு பகுதியில் உள்ள வெளிப்புற சுவரில் பல இடங்களில் செடிகள் வேரூன்றி வளர்ந்து வருகிறது. இதனால், மதில்சுவரில் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.செடிகளை உடனே அகற்றாவிட்டால், நாளடைவில் செடிகள் மரங்களாக வளர்ந்து சுவர் பலமிழந்து இடிந்து விழும் அபாயம் உள்ளது.எனவே, சுவரில் வளர்ந்துள்ள செடிகளை உடனே அப்புறப்படுத்த ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.