மானாமதுரை சோனையா சுவாமி கோயிலில் பாரம்பரிய பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2022 04:05
மானாமதுரை: மானாமதுரை சோனையா சுவாமி கோயிலில் 117ம் ஆண்டு பாரம்பரிய பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் ஓலைப்பெட்டியில் பூஜை சாமான்களை கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
மானாமதுரை வைகை ஆற்றங் கரையோரம் உள்ள சோனையா சுவாமி கோயில் 117ம் ஆண்டு பாரம்பரிய பொங்கல் விழாவை முன்னிட்டு குலாலர் சமுதாய மக்கள் 300க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை தங்களது வீடுகளிலிருந்து பொங்கல் வைப்பதற்கான பூஜை சாமான்களை ஓலைப் பெட்டியில் வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.இதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு பூஜை பெட்டிகளை சுமந்து கொண்டு மானாமதுரை மாங்குளம் ரோட்டில் உள்ள அலங்காரகுளத்திற்கு சென்ற சாமியாடிகள் அங்கிருந்து சாமி ஆடியபடி பூஜை பெட்டிகளை ஊர்வலமாக தூக்கிக்கொண்டு கோயிலுக்கு வந்து கோயில் முன்பாக பூக்குழி இறங்கி சுவாமியை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து ஏராளமான ஆடு,கோழிகளை பலியிட்டனர்.பாரம்பரிய விழாவை முன்னிட்டு சோனையா சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. பொங்கல் பூஜை விழாவை முன்னிட்டு வெளிநாடுகளில் பணியில் இருந்த ஏராளமான குலாலர் சமூகத்தினர் விடுமுறை எடுத்துக்கொண்டு பொங்கல் விழாக்களில் குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர். பொங்கல் திருவிழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் இரவு வைகை ஆற்றுக்குள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை குலாலர் சமூக சங்கத்தினர் செய்திருந்தனர்.