வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வைகாசி பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பப்பட்டனர். பக்தர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்கள், பாலீதின் கவர்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மதியம் 12:00 மணி வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோச வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையிலும் பக்தர்கள் ஆங்காங்கே மர நிழலில் தங்கி, சாமி தரிசனம் செய்து திரும்பினர். அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு மே 31 வரை பக்தர்கள் தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மலையேற அனுமதிக்கப்படுவார்கள். இரவில் மலையில் தங்குவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.