கர்நாடகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தலம் குக்கே சுப்பிரமணியர் கோயில். தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள குமார பர்வதா மலையில் உற்பத்தியாகும் குமாரதாரா ஆற்றின் கரையில் இக்கோயில் உள்ளது. முருகப்பெருமான் அசுரர்களை வதம் செய்த பிறகு விநாயகர், பக்தர்கள் புடைசூழ இந்த மலைக்கு எழுந்தருளினார். அவரை தரிசிக்க வந்த இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகப்பெருமானுக்கு மணம் முடித்து வைத்தார். திருமண வைபவத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், தேவாதி தேவர்கள் அனைவரும் ஒன்று கூடினர். மணமகனான முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரே குமாரதாரா என்னும் நதியாக இங்கு ஓடுகிறது. இதில் நீராடினால் நோயில்லாத வாழ்வு அமையும். நாகங்களில் ஒன்றான வாசுகி தன்னை கருடன் தாக்காமல் இருக்க வேண்டி இங்குள்ள குகையில் தவம் இருந்தது. அதை ஏற்று அருள் புரிந்த முருகப்பெருமான் தன் அடியவராக இருக்கும்படி வாசுகிக்கு அருள்புரிந்தார். இதனடிப்படையில் இங்கு வாசுகிக்கு பூஜை செய்தால் அது முருகப்பெருமானுக்குரிய பூஜையாக கருதப்படுகிறது. இங்குள்ள வெள்ளி கவசமிடப்பட்ட கருட கம்பத்தை தரிசித்தால் விஷக்கடி பயம் தீரும். பக்தர்கள் சாப்பிட்ட இலையில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்தும் ‘உருளு சேவை இங்கு சிறப்பு. சர்ப்ப சம்ஹார பூஜை செய்து வழிபடுவோருக்கு நாக தோஷம் தீரும்.