ராமகிருஷ்ணர் சீடர்களுக்கு ஒருநாள் உபதேசம் செய்து கொண்டிருந்தார். “எல்லா உயிர்களிலும் பரம்பொருளான நாராயணர் இருக்கிறார். நல்லவர்களிடமும் அவர் இருக்கிறார்; தீயவர்களிடமும் அவர் இருக்கிறார். இருந்தாலும் தீயவர்களிடமிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் துன்பம் ஏற்படும்” என்றார். அப்போது சீடர் ஒருவர், ‘‘குருநாதா...தாங்கள் சொல்வது புரியவில்லையே’’ என்றார். அப்போது ராமகிருஷ்ணர் கதை ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தார். குருகுலத்தில் சீடன் ஒருவன் பாடம் படித்து வந்தான். அவனிடம் குருநாதர் ஒருநாள்,“உலகில் அனைத்தும் நாராயணன் தான், இந்த உண்மையை மறவாதே” என்றார். குருவின் வாக்கை அப்படியே ஏற்ற சீடன் அதை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். எளிய மண் புழுவில் இருந்து ஆறறிவு கொண்ட மனிதன் வரை அனைத்தையும் நாராயணராக பார்த்தான். ஒருமுறை நகரம் ஒன்றுக்குச் சென்றான் சீடன். திடீரென வழியில் அங்குமிங்கும் மக்கள் சிதறி ஓடுவதைக் கண்டான். சிலர் அவனையும் ஓடுமாறு கூறினர். காரணம் கேட்டான் அவன். “பட்டத்து யானைக்கு திடீரென மதம் பிடித்து விட்டது. அரண்மனையில் இருந்து ஆவேசமாக வந்து கொண்டிருக்கிறது. ஓடி ஒளிந்து கொள். இல்லாவிட்டால் மாட்டிக் கொள்வாய்” என்றார் ஒருவர். “யானையிலும் நாராயணர் தான் இருக்கிறார். அவர் என்னைக் காப்பாற்றுவார்’’ என்ற நம்பிக்கையுடன் அவன் போக்கில் நடந்து கொண்டிருந்தான். எதிரில் யானை ஒன்று பிளிறியபடி வந்தது. அதைத் துரத்தியபடி வந்த பாகன் விலகிச் செல்லுமாறு குரல் கொடுத்தான். சீடனோ அதை பொருட்படுத்தவில்லை. ஆவேசமுடன் வந்த யானை சீடனைத் துாக்கி வீசியது. பலத்த காயம் அடைந்த அவன் உயிர் தப்பியதே பெரும்பாடாகி விட்டது. குணம் பெற ஆறுமாதமாகி விட்டது. அதன்பின் ஒருநாள் குருநாதரைக் காணச் சென்றான். “எல்லா உயிர்களும் நாராயணர் என்று கூறினீரே, எனக்கு ஏன் இந்த கொடுமை நேர்ந்தது? யானையில் வந்த நாராயணர் ஏன் என்னைத் தண்டித்தார்?” எனக் கேட்டு அழுதான். “அப்பா...யானையாக வந்ததும் நாராயணர் தான். சந்தேகம் வேண்டாம். ஆனால் அதற்கு முன் பாகனாக வந்த நாராயணர் உன்னை ஒதுங்கச் சொல்லி எச்சரித்தாரே... ஏன் கேட்கவில்லை” எனக் கேட்டார். பதில் சொல்ல முடியாமல் அமைதியானான். ‘தீயவர்களிடம் விலகி இருப்பதே நல்லது’ என்னும் நீதியை வலியுறுத்தி உபதேசத்தை முடித்தார் ராமகிருஷ்ணர்.