மஞ்சூர் பகுதியில் மழை வேண்டி சிறப்பு பூஜை விநாயகருக்கு கிராம மக்கள் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2012 12:08
மஞ்சூர் : மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் மழை வேண்டி கிராம மக்கள் சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர். மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான கீழ்குந்தா, எடக்காடு, முக்கிமலை, கன்னேரிமந்தனை உட்பட பல்வேறு இடங்களில் தென் மேற்கு பருவ மழை பொய்த்ததால் விவசாய பயிர்கள், தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும் கிராம பகுதிகளுக்கு நீராதாரமாக உள்ள நீர் நிலைகளில் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் உற்பத்திக்கு பயன்படும் அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் குறைந்ததால் மின் உற்பத்தியிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மஞ்சூர் பகுதிகளில் உள்ள கிராம மக்கள் நீராதாரங்களிலும், கோவில்களிலும் மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர். எடக்காடு கிராமத்தில் ஊர் தலைவர்கள் பெள்ளிகவுடர், தர்ஜிகவுடர் தலைமையில் அங்குள்ள விநாயகர் கோவிலில் பூஜை செய்தனர். கன்னேரி மந்தனை கிராம மக்கள் தங்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் நீராதார பகுதியில் பூஜை செய்தனர். பூஜையில் ஏராளமான பெண்கள் தண்ணீர் குடங்களுடன் ஊர்வலமாக சென்று விநாயகருக்கு அபிஷேகம் செய்து வழிப்பட்டனர். பாதக்கண்டி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் தண்ணீர் குடங்களுடன் ஊர்வலமாக சென்று மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். மழை வேண்டி நடந்த சிறப்பு பூஜையையொட்டி கிராமங்களில் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை.