தங்கப்பல்லக்கில் நாளை புறப்படுகிறார் கள்ளழகர்: எதிர்சேவைக்கு தயாராகும் மதுரை மக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2026 01:04
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்படுகிறார். ஏப்., 30 அதிகாலை 5:30 மணிக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. அன்றிரவு 11:30 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தங்கக்குதிரையில் எழுந்தருளி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துக்கொண்டு வைகையாற்றுக்கு புறப்படுகிறார். தமுக்கம் எதிரே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய பின் மே 1 அதிகாலை 5:30 முதல் 5:55 மணிக்குள் வைகையாற்றில் தங்கக்குதிரையில் எழுந்தருளுகிறார். இதைதொடர்ந்து மதியம் ராமராயர் மண்டபத்தில் அங்கப்பிரதட்சணம் நடக்கிறது. அன்றிரவு வண்டியூர் பெருமாள் கோயிலில் சுவாமி எழுந்தருளுகிறார். மே 2 காலை 11:30 மணிக்கு வைகையாறு தேனுார் மண்டபத்தில் சேஷ வாகனத்திலும், மதியம் கருட வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. மே 4 அதிகாலை பூப்பல்லக்கில் மீண்டும் கள்ளழகராக அழகர்கோவில் நோக்கி சுவாமி புறப்பட்டு, மே 5 காலை 10:40 மணி முதல் 11:10 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார். அழகர் எழுந்தருளும் தங்கக்குதிரை, சேஷ, கருட வாகனங்கள் நேற்று அழகர்கோவிலில் இருந்து தல்லாகுளம், வண்டியூர் பெருமாள் கோயில்களுக்கு கொண்டு வரப்பட்டன.