மயிலாடுதுறை: மயிலாடுதுறை சியாமளா தேவி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. தருமபுர ஆதீன குருமகா சன்னிதானம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சியாமளாதேவி அம்மன் கோவில் உள்ளது. 24 ஆண்டுகளுக்கு பின்னர் இக்கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 1ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. நேற்று காலை 4ம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்று மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியம் இசைக்க கோவிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் பூம்புகார் எம்எல்ஏ. நிவேதா எம் முருகன், மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.