சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் ஹிந்து அறநிலையத்துறை பதில் நோட்டீஸ்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2022 05:06
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் அனுப்பிய கடிதத்திற்கு ஹிந்து சமய அறநிலைய ஆட்சித் துறை கமிஷனர் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஹிந்து சமய அறநிலைய ஆட்சித் துறையால் உருவாக்கப்பட்ட குழுவினர் வரும் 7, 8ம் தேதிகளில் ஆய்வு செய்ய உள்ளதாக கடந்த மாதம் 26ம் தேதி, தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதற்கு, சிதம்பரம் நடராஜர் கோவில் 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பொது தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வருவதாக கூறி ஆட்சேபனை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கடந்த மாதம் 30ம் தேதி அறநிலைய ஆட்சித் துறைக்கு ஆட்சேபனை கடிதம் எழுதினர். இதற்கு, பதில் அளித்து ஹிந்து சமய அறநிலைய ஆட்சித் துறை கமிஷனர் கண்ணன் அனுப்பியுள்ள நோட்டீஸ் விவரம் வருமாறு:நடராஜர் கோவிலின் நிர்வாகத்தை சீரமைக்க கோவிலின் அலுவல்களை விசாரிக்க குழுவை நியமிக்க ஆணையருக்கு அதிகாரம் உண்டு. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொரோனா தொற்றுக்கு முன் கனகசபை மீது ஏற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப் பட்டது. அதன்படி, சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது பக்தர்கள் ஏற தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் குறைந்ததால் அனைத்து கட்டுப்பாடுகளையும் அரசு தளர்த்தி கோவிலை பக்தர்கள் வழிபாட்டிற்காக திறக்க அனுமதி அளித்தது. உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய உத்தரவிடப்பட்டது. பல்வேறு தீர்ப்புகளில் நடராஜர் கோவில் பொது கோவிலாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கோவில் விவரங்கள் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைக்க அறநிலையத்துறைக்கு தகுதி உண்டு. எனவே, கமிஷனர் பிறப்பித்த நடவடிக்கைகளை திரும்பப் பெறுவது இல்லை எனவும் வரும் 7, 8ம் தேதி ஆய்வை முடிக்க குழுக்களுடன் இணைந்து செயல்படுமாறு உத்தர விட்டுள்ளது.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. நடராஜர் கோவில் பொது தீட்சதர்கள் அனுப்பிய ஆட்சேபணை கடிதத்திற்கு அறநிலையத்துறை பதில் கடிதம் அனுப்பியுள்ள சம்பவத்தால் நடராஜர் கோவில் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.