பதிவு செய்த நாள்
06
ஜூன்
2022
09:06
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே எமதர்மர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
சிறுமுகை அருகே சென்னம்பாளையத்தில் எமதர்மர் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா, கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. சனிக்கிழமை வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை ஆகியவை நடந்தன. நேற்று இரண்டாம் கால யாக வேள்வி பூஜையும், வேதிகா அர்ச்சனை, துவாரபாலகர் பூஜை, பஞ்ச கஷ்டம் பாராயணம், ஆயுஸ் கோபமும், அக்னி ஹோமம், அஸ்தர ஹோமம், காயத்ரி ஹோமம் மூல மந்திரம், ஜெபம் ஹோமம் ஆகியவை நடைபெற்றன.
வெங்கடேசன் சாஸ்திரி, தண்டாயுதபாணி சாஸ்திரி குழுவினர் யாக வேள்விகளை நடத்தினர். நேற்று காலை, 7:30 மணிக்கு மங்கள வாத்தியங்கள், வாணவேடிக்கை முழங்க, புனித தீர்த்தக் குடங்கள் கோவிலை வலம் எடுத்து வந்தனர். தொடர்ந்து, 8:30 மணிக்கு கோபுர கலசத்திற்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு எமதர்மர், இன்ப விநாயகர், காலகாலேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் நிர்வாகி கந்தசாமி மற்றும் விழா குழுவினர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மகா அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. இவ்விழாவில் முன்னாள் டி.எஸ்.பி., வெள்ளியங்கிரி, கோவை மாவட்ட ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க தலைவர் தம்பு, மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜ்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.