பதிவு செய்த நாள்
06
ஜூன்
2022
04:06
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சி தி. பள்ளபட்டி மாங்குளத்தில் கருப்புசாமி, காளியம்மன், மந்தை பகவதி அம்மன், செங்கடா மாமுனி, மதுரை வீரன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி கடந்த ஜூன் 3 விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி உள்ளிட்ட ஹோம பூஜை நடந்தது. தொடர்ந்து பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தங்கள் நிறைந்த குடங்கள் மற்றும் முளைப்பாரி கருப்பசாமி கோவிலில் இருந்து அழைத்து வரப்பட்டது. பின் கோபுர கலசம் சேதம் செய்தல், திருப்பள்ளி எழுச்சி, மங்கல இசை மற்றும் முதலாம் ,இரண்டாம், மூன்றாம், நான்காம் கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து தீர்த்தக் குடங்கள் மேளதாளம் முழங்க, பக்தர்கள் ஆரவாரத்துடன் கோவிலைச் சுற்றி வந்து, கோபுரத்தின் உச்சியில் உள்ள கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க தீர்த்தம் கும்பங்களில் ஊற்றி மேற்குறிப்பிட்ட தெய்வங்களில் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கருடன் வானத்தில் வட்டம் அடித்தது. பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராமராசு, தி.மு.க., ஒன்றிய செயலாளர் தர்மராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா தர்மராஜ் மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.