1965ல் திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளிக்கு வந்திருந்தார் காஞ்சி மஹாபெரியவர். அப்பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தர முதலியாரின் எஸ்டேட்டில் தங்கியிருந்தார். அதன் மேலாளர் கிருஷ்ணானந்தம். அவரது மனைவி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். சுவாமிகளிடம் தீர்வு கேட்ட போது சந்திர மவுலீஸ்வரர் பூஜையில் தரும் தீர்த்தத்தை பெற்று அதில் நீராட உத்தரவிட்டார். அப்படியே செய்ய வயிற்றுவலி மறைந்தது. மற்றொரு சமயம் மஹாபெரியவர் ஆந்திராவிலுள்ள சூலுார்பேட்டையில் முகாமிட்டிருந்தார். அவரைத் தரிசிக்க மேலாளர் கிருஷ்ணானந்தனுடன் வந்தார் சண்முகசுந்தரம். தரிசித்து முடித்ததும் உடனே சென்னை புறப்பட வேண்டியிருந்ததால் விடைபெற நின்ற போது, ‘‘இப்போது புறப்பட வேண்டாம். மெதுவாக செல்லலாமே’’ என தடுத்தார் மஹாபெரியவர். சில மணி நேரம் காத்திருந்து விட்டு பிரசாதம் பெற்ற போது, ‘‘வண்டியை ஓட்டப்போவது யாரு நீங்களா... ஜாக்கிரதையாக செல்வது நல்லது’’ என சண்முக சுந்தரத்திடம் அறிவுறுத்தினார். சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்தில் மோதியது. இருவரும் உயிர் பிழைத்தனர். மறுநாள் காலையில் மடத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர், பயணம் குறித்து சண்முக சுந்தரத்திடம் தொலைபேசியில் விசாரித்தார். பேராபத்தில் இருந்து காப்பாற்றவே மஹாபெரியவர் தாமதமாக அனுப்பி வைத்த கருணையை எண்ணி வியந்தார்.