சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 5 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5ம் மண்டகப்படி நாளான நேற்று திருக்கல்யாணம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு சேவுகப்பெருமாள் ஐயனார் பூரண புஷ்கலா தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு 7:00 மணிக்கு கிராமத்தார்கள் முன்னிலையில் தேவியுடன் சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு திருக்கல்யாணம் நடந்தது. கோயில் சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து ஊஞ்சலாட்டு உற்சவம் நடந்தது. திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் மஞ்சள் குங்குமம் தாலிக்கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அனந்தசயனம் வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். 6ம் திருநாளான இன்று இரவு கழுவன் திருவிழா நடக்கிறது. ஜூன் 13ம் தேதி திருத்தேரோட்டமும், 14ம் தேதி பூப்பல்லக்கு உற்சவமும் நடக்கிறது.