பதிவு செய்த நாள்
13
ஜூன்
2022
10:06
தசாவதாரங்களில் அதிக கோயில்கள் அமைந்த அவதாரம் கிருஷ்ணருடையதுதான். இதில் பார்த்தசாரதியின் கோலத்தை மையமாகக் கொண்டது சென்னை திருவல்லிக்கேணி.
சென்னை நகரின் முக்கிய பகுதி திருவல்லிக்கேணி. இங்குள்ள திருக்குளம் அல்லி மலர்களைக் கொண்டிருந்ததால் அல்லிக்கேணி என்றனர். இது திருமகளே தோன்றிய திருக்குளம். ஒருமுறை திருமாலுக்கும், திருமகளுக்கும் இடையே ஊடல் நேர்ந்தது. இதைத் தொடர்ந்து மகாலட்சுமி பூவுலகத்துக்கு வந்தார். வேதவல்லி என்னும் பெயருடன் அல்லிக்கேணி குளத்தில் தோன்றினார். இங்கு தவம் செய்து கொண்டிருந்த பிருகு முனிவர் குழந்தை வடிவில் தோன்றிய வேதவல்லியை எடுத்து வளர்த்தார்.
திருமகளை விட்டு திருமால் அதிக காலம் தனித்து இருந்துவிட முடியுமா? சுந்தர இளவரசராக இங்கு வந்தார். அவரைக் கண்டதும் மங்கை வேதவல்லி இவரே என் மன்நாதர் (கணவர்) எனக் கூறினாள். இருவருக்கும் திருமணம் நடந்தது. மாசி மாத மகாதுவாதசியன்று இவர்களின் திருமணம் நடந்தது. மன்னாதர் என்று பெயர் கொண்ட பெருமாள் இங்கு அரங்கனாக தனி சன்னதியில் பள்ளி கொண்டிருக்கிறார்.
அப்படியானால் பார்த்தசாரதிப் பெருமாள் இங்கு எழுந்தருளியது எப்போது?
ஆத்ரேயர் என்னும் முனிவர் வேத வியாசரை சந்தித்து வணங்கி தான் நன்கு தவம் புரிவதற்குரிய இடம் ஒன்றைக் கூற வேண்டும் என விண்ணப்பித்தார். வேதவியாசர் அவருக்குப் பரிந்துரைத்த தலம் திருவல்லிக்கேணி.
மேலும் இங்கு சுமதி என்ற பெயர் கொண்ட முனிவர் தவம் செய்து கொண்டிருக்கிறார். அர்ஜுனனுக்கு கீதை உபதேசம் செய்த கண்ணனை அதே பார்த்தசாரதியின் வடிவில் காணவேண்டும் என்பதற்காகத் திருமாலை வேண்டித் தவம் புரிகிறார். ‘திருவல்லிக்கேணி தவம் புரிவதற்கு நிச்சயம் ஏற்ற தலம் தான்’என்ற வேதவியாசர் பார்த்தசாரதிப் பெருமானின் மங்களமான விக்ரகம் ஒன்றையும் ஆத்ரேயரிடம் கொடுத்தனுப்பினார். ஆத்ரேய முனிவர் அல்லிக்கேணியை அடைந்து, பெருமாளின் விக்ரகத்தை சுமதி முனிவரிடம் அளித்தார். அந்தத் திருவுருவத்தை திருவல்லிக்கேணியில் பிரதிஷ்டை செய்தார் சுமதிமுனிவர்.
இங்கு மீசையுடன் காட்சி அளிக்கிறார் பெருமாள்! யாதவ குலத்தில் பிறந்தவர் கண்ணன் என்பதால் மீசையுடன் காட்சியளிக்கிறார். ஒரு கரத்தில் சங்கு மறுகரத்தில் சக்கரம், இவை தவிர மேலும் இரு கரங்கள் என்றுதான் திருமாலின் உருவம் பெரும்பாலும் காணப்படும். ஆனால் பார்த்தசாரதிப் பெருமாள் சன்னதியில் மூலவர் இரண்டே கைகள் கொண்டவராகத் தோற்றமளிக்கிறார். வலக்கை சங்கை ஏந்தி இருக்க, இடது கை தனது திருவடியை பக்தனுக்கு நினைவுறுத்தும் வகையில் வரத முத்திரையுடன் உள்ளது. போரில் பங்கு பெற மாட்டேன் என்று கூறிய காரணத்தால் பார்த்தசாரதியின் கையில் சக்கரம் இல்லை
தன் குடும்பத்தினருடன் காட்சி தருகிறார் கண்ண பிரான்! பெருமாளின் வலப்புறத்தில் ருக்மணியும், அருகில் அண்ணன் பலராமர், தம்பி சாத்யகி, மகன் பிரக்த்யும்னன், பேரன் அநிருத்தன் மற்றும் தோழர் அக்ரூரர் ஆகியோரும் உள்ளனர். இக்கோயிலின் பின்புறத்தில் மேற்கு நோக்கிய சன்னதி ஒன்று உள்ளது. அதில் தெள்ளிய சிங்கர் எழுந்தருளி இருக்கிறார். அதாவது நரசிங்கப்பெருமாள்.
நின்றகோலம் (பார்த்தசாரதிப் பெருமாள்), அமர்ந்த கோலம் (நரசிம்மர்), சயனக்கோலம் (மன்னாதர்) ஆகிய மூன்று கோலங்களையும் இங்கு கண்டுகளிக்கலாம்.
கோயிலின் தெற்கு நோக்கிய மற்றொரு சன்னதியில் ராமபிரான், தனது மூன்று தம்பிகளுடனும் சீதை, அனுமனுடன் காட்சி தருகிறார். மதுமன் என்ற முனிவரின் வேண்டுகோளுக்கிணங்கி இப்படி காட்சி தருகிறாராம்.
பார்த்தசாரதிப் பெருமாளின் உற்ஸவ மூர்த்தியை முதலில் காண்பவர்களுக்கு திகைப்பு உண்டாகக் கூடும். திருமாலின் முகம் தழும்புகள் நிறைந்ததாக உள்ளது. அது பக்தனுக்காகப் பரமன் ஏற்றுக் கொண்ட தழும்புகள். பாரதப் போரில் அர்ஜுனனுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பீஷ்மரின் கணைகளைக் கண்ணனே ஏற்றுக் கொண்டதால் உண்டான அம்புத் தழும்புகள் அவை. அதையும் மீறி கண்ணனின் புன்னகை நம்மை மயக்க வைக்கிறது. தவிர தினமும் அபிஷேகத்துக்குப் பிறகு சிறிது நேரத்திலேயே இந்த பொன்னிற விக்ரகம் (திருமாலுக்கே உரிய) கருநீல நிறத்தை அடைவதாகக் கூறி வியப்பவர்கள் உண்டு.
ஸ்ரீராமானுஜரின் பெற்றோர் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்த போது, திருக்கச்சி நம்பியின் ஆலோசனைப்படி திருவல்லிக்கேணி குளத்தில் நீராடி வேண்டிய பிறகே அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டியது.
பார்த்தசாரதிப் பெருமாளின் பெருமைகள் இன்னும் பல உண்டு. தியாகராஜ சுவாமிகளும், முத்துசாமி தீட்சிதரும் இங்கு தரிசித்து அருள் பெற்றிருக்கிறார்கள்.
"ஒரு வல்லித்தாமரையாள் ஒன்றிய சீர்மார்பன்" என்கிறார் திருல்லிக்கேயிணின் அருகிலுள்ள மயிலையில் பிறந்த பேயாழ்வார். "மாவல்லிக்கேணியான், ஐந்தலைவாய் நாகத்து அணைவாளாக் கிடந்தருளும்" என்கிறார் திருமழிசையாழ்வார். பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் கூட இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.
சமீப காலப் பெருமைக்கும் குறைவிலாத தலம் இது. கண்ணன் குறித்த பாடல்களை பார்த்தசாரதி பெருமாளை மனதில் கொண்டே பாரதியார் எழுதியிருக்கவேண்டும் என்று அவருக்கு நெருங்கியவர்கள் நம்புகிறார்கள். அடிக்கடி இங்கு பாரதியார் வருகை தந்திருக்கிறார்.
விவேகானந்தர் அமெரிக்கா சென்ற போது முதலில் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. தன் நெருங்கிய நண்பரான அளசிங்கப் பெருமாளுக்கு ஒரு கடிதம் எழுதினார். "அளசிங்கா நீ இப்பொழுதே இக்கணமே ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்குச் செல்வாய். அவன் திருமுன்னர் வீழ்ந்து பணிவாய் எனத் தொடங்கும் அக்கடிதம் இந்திய மக்களின் வாழ்வு செம்மைப்பட பார்த்தசாரதிப் பெருமானின் அருள் தேவை என்கிறது. ராமகிருஷ்ண மடத்தினர் இதை ஆங்கிலத்திலும் தமிழிலும் கல்வெட்டாக ஆக்கி கோயிலில் இடம் பெறச் செய்துள்ளனர். ஆக காலவரையரையின்றி விரியும் பெருமைகள் படைத்ததாக விளங்கி வருகிறது இக்கோயில்.