பதிவு செய்த நாள்
17
ஜூன்
2022
10:06
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த காஞ்சியிலுள்ள, கரைகண்டேஸ்வரர் கோவிலிற்கு, சோழர் கால ஆட்சியின்போது, நிலதானம் வழங்கியதை தெரிவிக்கும் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும், வரலாற்று ஆய்வாளருமான ராஜ்பன்னீர்செல்வம் மற்றும் உதயராஜா தலைமையிலான குழுவினர், திருவண்ணாமலை அடுத்த காஞ்சியில் கள ஆய்வு நடத்தினர். அப்போது, அங்குள்ள சிவன் கோவில் அருகே பலகை கல்லில் செதுக்கப்பட்ட கல்வெட்டை கண்டறிந்தனர். இது குறித்து, ராஜ் பன்னீர்செல்வம் கூறியதாவது: திருவண்ணாமலை அடுத்த காஞ்சி சிவன் கோவில் அருகே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு, ஐந்து அடி உயரம், இரண்டடி உயரம் உள்ளது. இது கடந்த, 1216– 1246ம் ஆண்டு வரை ஆண்ட, மூன்றாம் ராஜராஜ சோழன் காலத்தை சேர்ந்தவை. கல்வெட்டின் முன்புறம் சூலம் மற்றும் பக்கவாட்டில் இரண்டு விளக்கு, மேற்பகுதியில் சந்திரன், சூரியன் மற்றும், 13 வரிகளில் எழுத்தும், பின்புறம், 15 வரிகளில் எழுத்தால் எழுதப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டின் மூலம், அப்பகுதியில் உள்ள கரைகண்டேஸ்வரர் கோவிலிற்கு, பிருத்திவி கங்கனான நிலைட்ட பெருமான் என்பவர், நிலதானம் வழங்கியதையும், இவை, சந்திர, சூரியர் உள்ளவரை செல்லும் என்றும், அதை பாழ்படுத்துபவர், கங்கையிலுள்ள பசுவை கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.