பதிவு செய்த நாள்
18
ஜூன்
2022
03:06
அச்சிறுப்பாக்கம்,: அனந்தமங்கலம் கிராமத்தில், ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த, அனந்தமங்கலம் கிராமத்தில், பல நுாற்றாண்டு பழமை வாய்ந்த ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த, கோவில் அறங்காவலர், திருப்பணி குழுவினர், கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, கோவிலில் உள்ள அனந்தசயன பெருமாள், சிவன் சன்னிதி என, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சமீபத்தில் அனைத்து பணிகளும் முடிந்தன. தொடர்ந்து, கும்பாபிஷேக விழா, கடந்த 15ல், யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு, ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரருக்கு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம், இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. இதில், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், தாமு மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, திருப்பணி குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.