தியாகதுருகம்: அசகளத்தூரில் நூற்றாண்டு பழமையான ஸ்ரீ கோலத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. தியாகதுருகம் அடுத்த அசகளத்தூரில் நூற்றாண்டு பழமையான ஸ்ரீ கோலத்தி அம்மன் கோயில் உள்ளது. பக்தர்களின் முயற்சியால் நன்கொடை வசூலிக்கப்பட்டு கோயில் புதுப்பிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் விநாயகர், அய்யனார், கருப்பையா, சன்னியாசியப்பர், பரிவார தேவதைகள் சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேக பூஜை நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு கடம் புறப்பட்டு கோயிலை வலம் வந்து கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.