கருவாழக்கரை காமாட்சி கோவில் கும்பாபிஷேகம் : 23ம் தேதி நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2022 08:06
மயிலாடுதுறை : கருவாழக்கரை ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கருவாழக்கரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சக்தி பீடமான ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. காஞ்சி மகா சுவாமிகள் ஆல் பூஜிக்கப்பட்ட கருவாழக்கரை காமாட்சியம்மன் சைவம், வைணவம் என்ற பேதங்களை கடந்து அனைவரின் குலதெய்வமாக விளங்கி வருகிறார். இங்கு எழுந்தருளி உள்ள காமாட்சியம்மன் உமையவளாக, ஜெகன் மாதாவாக, தாயாக தேவர்களை காத்ததுடன், தன்னை தேடி வரும் பக்தர்களையும் காத்து வருகிறாள். மாராசூரன் என்னும் அரக்கன் தன் தவ பலத்தால் உஷ்ண நோயை உண்டு பண்ணி கொடுமைப்படுத்தி வந்தபோது தேவர்கள் ஒன்றுகூடி சிவனை வேண்ட சிவன் தன் ஜடாமுடியில் இருக்கும் கங்கையை சீதள சக்தியாக மாற்றி கையில் பிரம்பு, விபூதி, வேப்பிலை ஆகியவற்றை அளித்து மாராசூரனை வதம் செய்வித்தான். அம்மை நோயை நீக்கியதால் அம்மை என போற்றப்பட்டாள். இத்தகைய சிறப்பு பெற்ற சங்கடங்களைத் தீர்த்து வைக்கும் கருவாழக்கரை ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடைபெறுகிறது. இதற்கான இன்று மாலை 6 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கவுள்ளது. கும்பாபிஷேக வைபவத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் பல்வேறு ஆதீன குருமகா சன்னிதானங்கள், அமைச்சர்கள் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு உயரதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் வேத சிவாகம முறைப்படி நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காமாட்சி அம்மனின் அருளைப் பெற வேண்டுமென கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சென்னை தொழிலதிபர் டெக்கான் மூர்த்தி, மயிலாடுதுறை தொழிலதிபர் விஜயகுமார் மற்றும் கருவாழக்கரை கிராம மக்கள் குலதெய்வ வழிபாட்டு காரர்கள் செய்து வருகின்றனர்.