ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் எளிமையாக சுவாமி தரிசனம் செய்த மத்திய பெண் அமைச்சர்; பக்தர்கள் வியப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2022 05:06
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லெகி எளிமையான முறையில் சாமி தரிசனம் செய்தார். இதனைக் கண்டு கோயிலுக்கு வந்த மற்ற பக்தர்கள் வியப்படைந்தனர். நேற்று இரவு 08:10 மணிக்கு கோயிலுக்கு வந்த மத்திய அமைச்சரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் எவ்வித ஆடம்பரமும், அதிகார தோரணையும் இல்லாமல் எளிமையான முறையில், ஒரு பெண் பக்தராக கோயில் கொடிமரம், நரசிம்மர் சன்னதி வணங்கி ஆண்டாள் சன்னதிக்கு வந்தார். அங்கு கோயில் பட்டர்கள் வரவேற்று மரியாதை செய்தனர். பின்னர் கோயில் உட்பிரகாரம் சுற்றி வந்து தங்க விமான கோபுரத்தை தரிசனம் செய்தார். பின்னர் ஆண்டாள் நந்தவனம், ராஜகோபுரம், வடபத்ரசாயி சன்னதியில் சாமி தரிசனம் செய்த அமைச்சர், கோபால விலாசத்தின் கலை வேலைப்பாடுகளை கண்டு வியந்தார். பின்னர் அமைச்சருடன் கட்சி நிர்வாகிகள் போட்டோ எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் தமிழில் நன்றி சொல்லி புறப்பட்டார். ஆண்டாள் கோயிலுக்கு திராவிட இயக்க அரசியல்வாதிகள் வரும்போது கட்சியினரும், அதிகாரிகளும் பந்தாவும், கெடுபிடியும் செய்வது வழக்கம். இந்நிலையில் மத்திய பெண் அமைச்சர் சாமி தரிசனம் செய்த போது, வழக்கமாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி சாமி தரிசனம் செய்தனர். அமைச்சரின் எளிமை கண்டு வியந்தனர்.