இந்து மதத்திற்கு எதிரான நடவடிக்கை: திராவிட கட்சிகள் மட்டுமல்ல, பா.ஜ.,வே ஈடுபட்டாலும் எதிர்ப்போம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2022 05:06
சேலம் :இந்து மதத்திற்கு எதிரான நடவடிக்கையில் திராவிட கட்சிகள் மட்டுமல்ல, பா.ஜ.கவே ஈடுபட்டாலும் எதிர்ப்போம் என மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார்குடி ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.
சேலம் சின்னக்கடை வீதி வேணுகோபால சுவாமி தேஸ்தானத்தில், நூதன தந்வந்தரி உற்சவ பிரதிஷ்டை விழா நடந்தது. காலையில் சுப்ரபாதம், தந்வந்தரி பிரதிஷ்டை நடைபெற்றது.விழாவில் மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார்குடி ராமானுஜ ஜீயர் கலந்து கொண்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதைத்தொடர்ந்து மன்னார்குடி ஜீயர் நிருபர்களிடம் கூறியதாவது:அக்னிபத் திட்டம் குறித்து விவரம் தெரியாதவர்களே போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த திட்டத்திற்கு எதிராக ராணுவ அதிகாரிகளோ, முன்னாள் ராணுவ வீரர்களோ கருத்துகளை தெரிவிக்கவில்லை. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிடுவது, இந்து விரோத செயல் ஆகும். இந்து கோவில்களின் நிர்வாகத்தில் தலையிடுபவர்கள் இஸ்லாம், கிறிஸ்தவ வழிபாட்டு தளங்களில் தலையிட முடியுமா?.
திராவிட கட்சிகள் மட்டுமல்ல, பா.ஜ.கவே இந்து மதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டாலும் எதிர்ப்போம். தமிழகத்தில் தொடரும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முதல்வரை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, இந்து மத பெரியவர்கள் அரசியல் பிரமுகர்களை சென்று சந்திப்பது வழக்கம் இல்லை. முதல்வர் எங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்பது தான் கலாசாரம்.இவ்வாறு அவர் கூறினார்.