பதிவு செய்த நாள்
21
ஜூன்
2022
05:06
பல்லடம்: பல்லடம் அருகே, திறந்தவெளியில் குடிமகன்கள் செய்யும் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அல்லாளபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அல்லாளபுரம் பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கோவில்கள், பள்ளி உள்ளிட்டவை உள்ளன. மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில், குடிமகன்கள் சிலர், திறந்த வெளியில் மது அருந்தியபடி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், திருப்பூர் - பொங்கலூரை இணைக்கும் வழித்தடத்தில் அல்லாலபுரம் கிராமம் அமைந்துள்ளது. விவசாய தொழில் இங்கு பிரதானமாக உள்ளது. இங்கு கூடியிருக்கும் மக்கள், தொழில், வேலை, கல்வி உள்ளிட்டவற்றுகாக, தினசரி, திருப்பூர், பல்லடம் சென்று வருகின்றனர். அரசு பள்ளி, கோவில்களுக்கு அருகே, குடிமகன்கள் சிலர் திறந்தவெளியில் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். போதையில் தள்ளாடி செல்வதும், ரோட்டில் அரைகுறை ஆடையுடன் கிடப்பதும் இங்கு வாடிக்கையாக உள்ளது. இவர்களால், பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு சென்று வரும் பெண்கள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் உள்ளிட்டோர் அச்சமடைகின்றனர். போலீசார் அவ்வப்போது ரோந்து பணி மேற்கொண்டு, குடுமகன்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.