பதிவு செய்த நாள்
22
ஜூன்
2022
04:06
தஞ்சாவூர், திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், உலக நன்மை வேண்டி அதிருத்ர யாகம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாரப்பர் கோவில் அமைந்துள்ளது. தருமபுர ஆதீனம் 27ம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நல்லாசியுடன் உலக நன்மை வேண்டி அதிருத்ர யாகமானது நடந்து வருகிறது.
இதற்காக கடந்த 17 ம் தேதி பூர்வாங்க பூஜைகள் செய்யப்பட்டு, 18ம் தேதி பாரத தேசத்தில் உள்ள புண்ணிய நதிகளான சிந்து, காவேரி, நர்மதா, பிரம்மபுத்திரா, கோதாவரி, தாமிரபரணி, கங்கை, யமுனா போன்ற நதிகளில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு, 121 கலசங்களில் வைக்கப்பட்டு, இன்று(22ம் தேதி) காலை முதல் மதியம் வரை ஒரு நாளைக்கு 1,331 முறை ருத்ர ஜெபம் ஜெபிக்கபட்டு, 11 நாட்கள் 14,641 முறை ஜெபங்கள் ஜெக்கப்படுகின்றன. இன்று 5 வது நாளாக ருத்ர ஜெபத்தை முன்னிட்டு, சிவ ஸஹஸ்ர நாமம், லலிதா ஸஹஸ்ர நாமம்,ருத்ர க்ரம அர்ச்சனை,பஞ்சாக்ஷரஹோமம், அதிருத்ர மஹாயாகம் என 11 பிரிவுகளாக பிரிந்து வேதங்கள் முழங்க, ஒரு லட்சம் பஞ்சாக்ஷர ஹோமங்கள் செய்யப்பட்டது. இறுதியில் பூர்ணாஹூதி, கலசத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்று, ஐயாரப்பர் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில், காஞ்சி ஸ்ரீ மகாபெரியவர் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் என ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.