பதிவு செய்த நாள்
22
ஜூன்
2022
05:06
சென்னை: கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில், கிராமக் கோவில் பூஜாரிகளுக்கு, ஆலய வழிபாட்டுப் பயிற்சி, 15 நாட்கள் நடத்தப்பட உள்ளது. கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவையில், 7,000 பேர் உறுப்பினராக உள்ளனர். பேரவையின் தொடர் முயற்சிகளால், கிராமக் கோவில் பூஜாரிகளுக்கான நலவாரியம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதியம், அதற்கு கீழ் உள்ளோருக்கு மாத உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.கிராமக் கோவில் பூஜாரிகளுக்கு, கிராமக் கோவில்களின் அமைப்பு, தெய்வங்களின் நிலை, அவர்களுக்கு செய்ய வேண்டிய பூஜைகள், அபிஷேகம், அலங்காரம்.அர்ச்சனைகள், அந்தந்த கோவில்களில் கடைபிடிக்க வேண்டிய ஆகம விதிகள், ஓத வேண்டிய மூலமந்திரங்கள் குறித்து விரிவான வழிகாட்டுதல்களை, இந்த பேரவை பயிற்சி அளித்து வருகிறது. அந்த வகையில், 52வது பயிற்சி முகாம், வரும் 30ம் தேதி முதல் ஜூலை 14 வரை, 15 நாட்களுக்கு, ராமேஸ்வரத்தில் உள்ள கோசுவாமி இரண்டாவது மடத்தில் நடக்க உள்ளது. இதில், 130 பூஜாரிகள் வரை பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கான பயிற்சியை இலவசமாக அளிக்கவும், இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்த பயிற்சியை பல்வேறு ஆன்மிக அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் அளிக்க உள்ளனர். மேலும் விபரங்களுக்கு, 97864 86671, 63814 21410 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.