பதிவு செய்த நாள்
25
ஜூன்
2022
11:06
திருப்பூர்: நான்கு இசைத்துாண்களுடன் வசந்த மண்டபம்; 84 கற்துாண்களுடன் மகா மண்டபம் என, மயிலரங்கம் வைத்தியநாத சுவாமி கோவில், தமிழர் கட்டட கலைக்கு கட்டியம் கூறும் வகையில் அமைந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் இருந்து, 11 கி.மீ., தொலைவில் உள்ள மயிலரங்கத்தில், தையல்நாயகி உடனமர் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட, திருப்பூர் ஸ்ரீவீர ராசேந்திரன் தொல்லியல் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிகுமார் கூறியதாவது: மயிலரங்கம் கோவிலில், 84 துாண்களுடன் மகா மண்டபம் அமைந்துள்ளது. வசந்த மண்டபத்தில் உள்ள நான்கு இசைத்துாண்களில், ஒவ்வொரு அங்குலமும், மாறுபட்ட இசையை தரும் அற்புதத்தை இங்கு கேட்டறிய முடியும்.தையல்நாயகி அம்மன் முன்மண்டபத்தில், தலா, 14 சிற்பங்கள் வீதம், நான்கு துாண்களில், 56 சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மூலவர் கருவறையை சுற்றிலும், விஜயநகர பேரரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்து கல்வெட்டு இருக்கிறது. தமிழர் கட்டட கலை மற்றும் சிற்பக்கலைக்கு சான்றாக விளங்கிய இக்கோவில், விஜயநகர பேரரசு ஆட்சிக்காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோவில் அருகே, 300 பிராமண குடும்பங்கள் வசித்து வந்தன. தினமும் ஆறுகால பூஜைகள், தேர்த்திருவிழா நடந்தது குறித்தும் கல்வெட்டுகளில் தகவல் கிடைத்துள்ளது. தற்போது ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது.கடந்த, 1985ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. பெருமை மிக்க இக்கோவிலை புராதன சின்னமாக அறிவித்து, பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.