பதிவு செய்த நாள்
27
ஜூன்
2022
09:06
கன்னியாகுமரி : லட்சுமி பாயி (திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் குடும்ப உறுப்பினர்): ழிவாரி மாநிலங்கள் உருவாவதற்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. ராஜா மார்த்தாண்ட வர்மா தனது தலைநகரை திருவனந்தபுரத்துக்கு மாற்றும் வரை கன்னியாகுமரி மாவட்டத்தின் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்று இருந்தது. காலப்போக்கில் அந்த கோயில் படிப்படியாக பாழடைந்தது.நீண்ட காலமாக மூடி வைத்ததாலும், எவ்வித பூஜைகளும் சடங்குகளும் இல்லாததாலும்,மெல்ல மெல்ல சிதிலமடைய தொடங்கியது. நீண்ட காலமாக, மூன்று வாசல்களால் அமைந்த கர்ப்பக்கிரகத்தின் நடுக்கதவை மட்டும் சிறிது நேரம் திறந்து வைத்து, விளக்கேற்றி, சிறிய அளவில் துளசி சார்த்தி அர்ச்சனை செய்து, வாழைப்பழ நைவேத்தியத்தை படைத்து விட்டு அந்த நடுக்கதவைப் பூட்டி வந்தார் ஒரு நம்பி.
புனர் நிர்மாணம் : திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் அஷ்டமங்கள தேவ பிரஸ்னம் 2011ல் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், 16 ஆயிரத்து 8 சாளக்கிராமங்களை கொண்டு கடுசர்க்கரை எனும் கூட்டுப் பொருளால் உருவாக்கப்பட்ட திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் மூலவிக்ரகம் மிகவும் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், தந்திரி மனலிக்கர மதுர் சுப்பிரமணியரு, எட்டக்காடு மது என்பவருடன் இணைந்து இந்த கோயிலின் வரலாற்றை தொகுக்கத் தொடங்கினார். கிருஷ்ணன் நம்பூதிரியும் இணைந்து, இந்த கோயிலை புனர்நிர்மாணம் செய்ய வேண்டும் என்ற திட்டம் உருவானது.
70 அடி தேக்கு: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலை சீரமைப்பதற்கான முயற்சிகள் 2005ல் தொடங்கப்பட்டன. அது பெரிதாக பலனளிக்காத நிலையில், சரித்திர ஆர்வலரான சுகுமாரன் நாயர்,தன் ஆயுட்காலத்தில் ஆதிகேசவப் பெருமாளை அந்த கோயிலின் முந்தைய புகழுடனும் சீருடனும் காண வேண்டும் என்று தினமும் பிரார்த்தனை செய்து வந்தார். அதனால், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீதர், இந்த கோயிலை சீரமைக்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டார்.இதற்கிடையே, திருவட்டாரில் பிறந்து, இப்போது பெங்களூரு ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் தலைவராக உள்ள மது பண்டிட் தாஸ், கோயில் வளாகத்தில் உள்ள கிருஷ்ணர் சன்னிதியை மரபார்ந்த முறையில் புதுப்பித்துக் கட்டினார். கேரளாவின் வனப்பகுதியில் இருந்து 70 அடி உயரமுள்ள தேக்குமரத்தை, தரையைத் தொடாதவாறு திருவட்டாருக்கு எடுத்து வந்து மூன்று கிரேன்கள் மற்றும் எக்கச்சக்கமான ஆட்களைக் கொண்டு 50 அடி உயரமுள்ள மதில் சுவரைத் தாண்ட வைத்து எண்ணை கேணி என்ற மரபு வழியில் அந்த தேக்குமரத்தை எண்ணையில் ஊறவைத்து கொடிமரத்தை உருவாக்கினார் மது பண்டிட் தாஸ்.
சிற்பி கைலாசன்: அனந்தபுரி விக்ரகங்களின் மூலபாகம் கருங்காலி மரத்தால் செய்யப்பட்டவை. இந்த விக்ரகத்தின் 7 ஆயிரத்து 200 நரம்புகள் கையால் பண்படுத்தப்பட்ட தேங்காய் நார்களால் உருவாக்கப்பட்டவையாகும். அதனைத் தொடர்ந்து கடுசர்க்கரை என்னும் மூலப்பொருளால் மெழுகப்பட்டு இந்த மூல விக்ரகம் தயாராகும்.கடுசர்க்கரை பதமாகக் காய்ந்ததும் கருங்கல்லைப் போல உறுதியாக இருக்கும்.அனந்தபுரி கடுசர்க்கரை திருப்பணியை நிகழ்த்தியவர் பிரம்ம மங்கலத்தைச் சேர்ந்த கைலாசன். அந்த அனுபவத்தின் அடிப்படையில் திருவட்டார் கோயிலுக்கு சிற்பியாக கைலாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். வேழப்பரம்பு பிரம்மதத்தன் திருமேனி என்ற வாஸ்து நிபுணர் இந்தப் பணியைத் தொடங்கினார். அவருக்குப்பின், அவருடைய சகோதரர் வேழபரம்பு சித்திரபானு திருமேனி இந்தப் பணியை முடித்து வைக்கிறார்.இளம் வயதில் ஆழ்ந்த ஞானம் பெற்ற, எழுந்தொளில் சதீஷ் பட்டாத்திரி என்ற இளைஞர், இந்த திருப்பணியில் ஆன்மிக ரீதியாக வழிகாட்டி வருகிறார்.
ஆத்ய ஆனந்தா: ஆதிகேசவப் பொருமள் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், புனர்நிர்மாணப் பணிகளைத் தொடங்க அந்த துறையிடம் இருந்து அனுமதிக் கடிதம் பெறப்பட்டது. இந்த கோயில் நிர்வாக அதிகாரி டாக்டர் கண்ணன், இதுதொடர்பான கடிதம் அளிக்கப்பட்டதும் அதன் அவசியம் உணர்ந்து விரைவாக செயல்பட்டார்.திருவனந்தபுரத்தின் அனந்தபத்மநாப சுவாமிஆனந்தா என்றும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள்ஆத்ய ஆனந்தா என்றும் அழைக்கப்படுகின்றனர். திருவட்டாரில் உற்சவங்களுக்கான முகூர்த்தங்கள் ஆனந்தரின் சன்னிதியில்தான்இன்றும் முடிவெடுக்கப்படுகின்றன.
ஆதிசேஷன் தரிசனம் : கேசி என்ற அரக்கன் ஆனந்தா என்னும் ஆதிசேஷனால் மூன்றுமுறை சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறான்.ஆதிகேசவன், ஆனந்தாவின் மேல்துயில் கொண்டிருக்கிறார். ஆனந்தாவின் இடுக்குகளில் இருந்து கேசியின் 12 கரங்கள் வெளியில் நீட்டிக் கொண்டிருக்கின்றன. கேசியின் கரங்கள் உள்ள இடங்களில் 12 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிவராத்திரியின் போது சிவபக்தர்கள் 12 சிவஷேத்திரங்களில் தரிசனம் செய்து விட்டு இறுதியாக ஆதிசேஷன் தரிசனத்துடன் தங்கள் விரதத்தை முடித்துக் கொள்கின்றனர்.
3 விக்ரகங்கள்: திருவட்டார் கோயிலில் 3 விக்ரகங்கள் உள்ளன.ஒன்று கடுசர்க்கரையால் பதப்படுத்தப்பட்ட 16 ஆயிரத்து 8 சாளக்கிராமங்கள் கொண்ட மூல விக்ரகம். 22 அடி நீளம் கொண்டது. இந்த மூல விக்ரகத்தின் மீது தண்ணீர் படக்கூடாது. அதனால் இதற்கு அபிஷேகம் கிடையாது. அபிஷேகம், அர்ச்சனை செய்வதற்கு என்று தனியாக அர்ச்சனா மூர்த்தி உள்ளது. உற்சவங்களுக்காக தனியாக உற்சவ மூர்த்தி உள்ளது.
பொதுவாக, கோயில்களில் மூல விக்ரகம், உற்சவர் ஆகிய 2 விக்ரகங்கள் இருக்கும். இங்கு 2 விக்ரகங்களுக்கு மேல் உள்ளதாலும் அனைத்து விக்ரகங்களும் சமமான முக்கியதுவம் உள்ளதாலும் பஹுபேர விதானம் என்று அழைக்கப்படுகிறது.கடுசர்க்கரை நிபுணர் கைலாசனால் முழுமையாக புனருத்தாரணம் செய்யப்பட்ட மூல விக்ரகம், வேழப்பரம்பு சித்திரபானு திருமேனி, தந்திரிகள் வசம் ஜூலை 29ம் தேதி ஒப்படைக்கப்படுகிறது. மறுநாள் அந்த விக்ரகம் கர்ப்பக்கிரகத்தில் அஷ்டபந்தனம் செய்யப்பட்டு கிரமப்படி பூஜைகள் தொடங்குகிறது.
ஆண்டவன் வைகுண்டத்தில் இருக்கிறான் -பூமியில் எல்லாமே நியாயமாக நடக்கின்றன… என்று பிரசித்திபெற்ற கவிதை ஒன்று உண்டு. ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள், பூவுலகில் உள்ள அனைவரின்மீதும் தன் பெருங்கருணையைப்பொழியும் வகையில், விரைவில் மீண்டும் தனது கர்ப்பக்கிரகத்தில் ஆரோகணிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம். ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மூல விக்ரகம், தவறான புரிதல்கள், அசம்பாவிதங்களால், தாமதிக்கப்பட்டிருந்தாலும், ஆன்மிக, கோயில் மரபில் இருந்து எந்த வகையிலும் வழுவாது அனைத்து திருப்பணிகளும் செய்துமுடிக்கப்பட்டுள்ளது. இது ஸ்ரீ அனந்தபத்மநாபரை பெரும் பூரிப்பில் நிச்சயம் ஆழ்த்தியிருக்கும்.
அறநிலையத்துறை மறுப்பு?: கோயில் கொடி மரத்தின் உலோக அடிப்பாகத்தை தங்க முலாம் பூசுவதற்கு, இந்துசமய அறநிலையத்துறை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. மது பண்டிட் தாஸ், ஏற்கனவே, 70 அடி உயரமுள்ள இந்த கொடிமரத்துக்கு உலோகத்தால் கவசம் தயாரித்து வைத்திருக்கிறார். அதை கோயிலுக்கு எடுத்து வருவதற்கான போக்குவரத்து செலவையும் அறநிலையத்துறை மறுத்துவருகிறது என்று கூறப்படுகிறது. தமிழாக்கம்: பென்னேஸ்வரன்