இலங்கை திருக்கேதீச்சரம் திருக்கேதீஸ்வரர் கும்பாபிஷேகம் : ஜூலை 6ல் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2022 12:07
இலங்கை மன்னார் பகுதியில் ஈழத் தமிழர்களால் கட்டப்பட்டுள்ள திருக்கேதீச்சர பெருமாள் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா தொடக்கம். ஜூலை ஆறாம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
சிவபெருமான் புவனபதியாக எழுந்தருளியுள்ள உத்தர கைலாயத்திற்கு நிகராக விளங்கும் தட்சிண கைலாயங்கள் என்று அழைக்கப்படுவது திருச்சிராப்பள்ளி, திருக்கோணேச்சரம், திருக்கேதீச்சரம் ஆகிய முப்பெரும் தலங்களாகும். இதில், கௌரியம்மை சமேத திருகேதீச்சர பெருமான் திருக்கோயில் இலங்கை மன்னார் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில் கேது பகவானால் பூஜிக்கப்பட்டு அருள் பெற்ற தலமாக விளங்குகிறது. ராஜராஜசோழன் காலம் முதல் குலோத்துங்கசோழன் காலம் வரை சோழப் பேரரசர்களால் திருப்பணி செய்யப்பட்ட சிறப்புடையது. சமயக் குரவர்களில் ஞானசம்பந்தர் மற்றும் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடல் பெற்ற தலமாகும்.
சிறப்பு வாய்ந்த இக்கோயில் ஈழத்தமிழர்களின் முயற்சியால் கருங்கல் திருப்பணியில் புதுப்பிக்கப்பட்டு வருகிற ஆறாம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று விழாவானது சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. விழாவினை மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் காப்பு உற்சவம் நடைபெற்று 6-ஆம் தேதி புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.