பதிவு செய்த நாள்
04
ஜூலை
2022
11:07
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு, தேர் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை இரு வேளைகளும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து வருகிறது.ஜூலை 1ம் தேதி தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்வாக தேர் திருவிழா நாளையும், 6ம் தேதி ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் நடக்கிறது. தேர் திருவிழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில் கீழ வீதி தேரடியில் நடராஜர்,சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்கள் புதுப்பித்து அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
கோவிலுக்குள் அன்னதானம் இல்லை : விழா குறித்து டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ், கூறுகையில், ஆனி திருமஞ்சன விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் மேற்கு கோபுரவாயில் மற்றும் வடக்கு கோபுரவாயில் வழியாக உள்ளே அனுமதிக்கப்படுவர். தரிசனம் முடிந்து பக்தர்கள் கிழக்கு மற்றும் தெற்கு கோபுர வாயில் வழியாக வெளியே செல்ல வேண்டும் என்றார்.மேலும் பொது தீட்சிதர்கள் சார்பில் நான்கு மணிக்குள் தரிசன விழாவை முடித்து கொள்வதாகவும், கோவிலுக்குள் அன்னதானம் வழங்குவதில்லை எனவும் தெரிவித்தனர்.