பதிவு செய்த நாள்
04
ஜூலை
2022
11:07
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தர்ம தரிசனத்தில் தரிசிப்பதற்காக, நேற்று காலை பக்தர்கள் 16 மணி நேரம் காத்திருந்தனர்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க, கோடை விடுமுறை முடிந்த பின்னும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். வார இறுதி நாட்களில், பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. திருமலைக்கு செல்லும் பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டையை காண்பித்து, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு, பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று காலை நிலவரப்படி, பக்தர்கள் திருமலை வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள, 32 அறைகளை கடந்து, ராம்பகிஜா ஓய்வறை அருகில் உள்ள தரிசன வரிசையில் காத்திருந்தனர். இதனால், தரிசனத்திற்கு 16 மணி நேரம் தேவைப்படுகிறது; 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு, 2 - 3 மணி நேரமும் தேவைப்படுகிறது.நேற்று முன்தினம் காலை, 88 ஆயிரத்து 26 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தினர்; 50 ஆயிரத்து 652 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், கோவிந்த ராஜசுவாமி சத்திரம் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டு வந்த சர்வ தரிசன டோக்கன்கள், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், ஏழுமலையானுக்கு இரவு 11:30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி, 12:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.