பதிவு செய்த நாள்
04
ஜூலை
2022
02:07
இறை விழிபாடு என்பது அதன் குறிக்கோளைப் பொறுத்து இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஆத்மார்த்தம் என்றும், பரார்த்தம் என்றும், தனது நலன், தன்னைச் சேர்ந்தவரின் நலன், தன் குடும்பத்தார்களின் நலன் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு வீட்டுக்குள் கடவுளை வழிபடுவது ஆத்மார்த்தம் இந்த வழிபாட்டின் வழிமுறைகளை க்ருஹாகமம் என்பதாக ஆகம சாஸ்திரங்களில் தனியே கூறப்படுகின்றன. ஒரு கிராமத்தின், ஊரின், நகரத்தில் உள்ள அனைத்து உயிர்களின் நன்மைக்காக, இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக ஊருக்குப் பொதுவான ஓர் இடத்தில் கடவுளை (கோயிலில்) அமைத்து பூஜைசெய்து வழிபடுவது என்பது பரார்த்தம். இதுவே கோயில்களில் கடவுளை வழிபடும் முறையாகும். இதன் பலம் தனி ஒரு நபருக்கோ, தனி ஒரு குடும்பத்துக்கோ, சொந்தமல்ல, மாறாக அவ்வூரில் வசிக்கும் மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள், செடி, கொடிகள், மரங்கள், பயிர்கள், முதலான அனைத்து உயிர்களின் நன்மைக்காகவே ஆகவே தான், ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும், தங்கள் தங்கள் வீட்டில் (ஆத்மார்த்தமாக) இறைவனை பூஜித்து வழிபட வேண்டும். அத்துடன் நில்லாமல் அவ்வூரிலுள்ள கோயிலுக்குச் சென்று அங்கேயும் இறைவனை (பரார்த்தமாக) வழிபட வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
தனது வீட்டில் கடவுளை (பூஜையறை) அமைத்து பூஜை செய்ய வசதியோ, சக்தியோ இல்லாதவர்கள் கோயிலில் மட்டுமாவது கடவுளை வழிபட்டு நன்மையை அடையலாம். ஆகவே, வீட்டில் செய்யும் பூஜைக்கும் கோயிலில் செய்யும் பூஜைக்கும் ஆத்மார்த்தம் (சுயநலன்), பரார்த்தம் (பொது நலன்) என்னும் வேறுபாடு நிச்சயம் உண்டு.