பதிவு செய்த நாள்
05
ஜூலை
2022
04:07
அவிநாசி: பாடல் பெற்ற தளமான அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில், ஆடல்வல்லானுக்கு 16 திரவியங்களில் அபிஷேக ஆராதனையுடன் ஆனி திருமஞ்சன விழா நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.
அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோவில், நாயன்மார்களால் பாடல் பெற்ற பெருமைக்குரிய தளமாகும். காசியில் வாசி அவிநாசி என்று காசிக்கு நிகராக போற்றப்படும் இத்திருத்தலத்தில், ஆண்டு தோறும் ஆடல்வல்லானான நடராஜப்பெருமான் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் செய்து ஆனி திருமஞ்சன விழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதனையடுத்து, இன்று ஆனி திருமஞ்சன விழாவானது, அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில், சிவகாமி அம்பிகா சமேத சிதம்பரேஸ்வரருக்கு, விபூதி, நல்லெண்ணெய், சந்தனாதி தைலம், திருமஞ்சனம், மஞ்சள் பொடி, வில்வப்பொடி, பஞ்சாமிர்தம், பால்,மஞ்சள் உள்ளிட்ட 16 திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. விழாவில், திருவாசகப் பாடல்களை சிவனடியார்கள் பாராயணம் செய்ய, மங்கள வாத்தியங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நடராஜருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் பல்வேறு மலர் மாலைகளால் சிறப்பு அணிகாரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றது. ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.