பதிவு செய்த நாள்
05
ஜூலை
2022
04:07
பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் உலக நன்மை வேண்டி நான்கு லட்ச ஜபங்களுடன் 1008 கலசாபிஷேகம் 7 நாட்கள் யாகசாலை பூஜைகளுடன் ஜூலை 19ல் நடைபெற உள்ளது.
உலகில் உள்ள உயிர்கள் நலம்பெற சிவப்பரம்பொருள் வேதசிவாகமங்கள் வழங்கியதாகவும், திருக்கோயில் வழிபாடுகளை சைவ சமயத்தில் சிவாகமங்கள் வழங்கியதாகவும், நான்கு லட்ச மந்திர ஜபம் இறைவனை மகிழ்விக்கும் என்பதும், இதனால் மக்களுக்கு துன்பம் நேரும் காலம், இன்னல் தரும் நோய் காலம், இயற்கை பேரிடர், வறட்சி போன்ற காலங்களில் இறைவனை ஜபம் மூலம் பிரார்த்திப்பதால் இன்னல் நீங்கி உலக உயிர்கள் நலம் பெறும் என்பது ஐதீகம். இதனையொட்டி கற்பக விநாயகர் கோயிலில் உலக உயிர்களின் நலன் வேண்டி ஜூலை 13ல் 4 லட்ச ஜபங்களுடன் 7 நாட்கள் யாகசாலை பூஜைகள், 1008 கலசாபிேஷகம் துவக்க நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
ஜூலை 13 ல் காலை 9:00 மணிக்கு யாகசாலையில் மகா கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. யாகசாலை பூஜைகளை தலைமைக் குருக்கள் பிச்சை சிவாச்சாரியார், சோமசுந்தர குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்கள் நடத்துகின்றனர். இரண்டாம் நாளில் சாந்தி ஹோமம், மூன்றாம் நாளில் வாஸ்துசாந்தி, நான்காம் நாளில் காப்புக்கட்டி, கலசங்கள் நிறுவுதல், முதற்கால பூஜையும், ஐந்தாம் நாளில் 2,3ம் கால யாகசாலை பூஜைகளும், ஆறாம் நாளில் 4, 5ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெறும். ஏழாம் நாளான ஜூலை 19 காலை 8:30 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை துவங்கும். காலை 11.00 மணிக்கு நான்கு லட்ச ஜப ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவர் கற்பகப் பெருமானுக்கு காலை 12:00 மணிக்கு கலசாபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை நடைபெறும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் கண்டனூர் நா.கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி முத்துப்பட்டிணம் சி.சுப்பிரமணியன் செட்டியார் செய்கின்றனர்.