1100 ஆண்டுகளுக்கு முன் செயல்பட்ட சமண பள்ளியின் தடயங்கள் கண்டெடுப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2022 04:07
காரியாபட்டி: காரியாபட்டி புல்லூரில் 1100 ஆண்டுகளுக்கு முன் செயல்பட்ட சமணப்பள்ளியின் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காரியாபட்டி புல்லூரில் பழமையான இடிந்த கோயில் இருப்பதாக அக்கிராமத்தைச் சேர்ந்த போஸ்வீரா, மாரீஸ்வரன் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில், பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் மதுரை அருண்சந்திரன் ஆய்வு செய்து கூறியதாவது, புல்லூரில் 9 துண்டு கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டன. அனைத்தும் வட்டெழுத்து, கிரந்த எழுத்தால் எழுதப்பட்டுள்ளது. இரண்டு அரசர்களின் பெயர்கள் இக்கல்வெட்டுகளில் உள்ளன. முற்கால பாண்டிய மன்னன் மாறன் சடையனின் 4ம் ஆட்சி ஆண்டு கல்வெட்டும், ராஜராஜ சோழன் இக்கோவிலுக்கு கொடுத்த நிவந்தம் பற்றிய கல்வெட்டும் உள்ளன. இதனை கணக்கிட்டு பார்க்கும் போது ஆயிரத்து 100 ஆண்டுகள் பழமையானது என தெரிகிறது. புல்லூரின் பழைய பெயர் திருப்புல்லூர். இது ஒரு சமண பள்ளியாக செயல்பட்டு வந்துள்ளது. இக்கோயிலின் பெயர் திருப்புல்லூர் பெரும்பள்ளி என்றும், உள்ளிருக்கும் இறைவன் அருகர் பட்டாளகர் என்றும் அறிய முடிகிறது. இக்கோவிலுக்கு நந்தா விளக்கெறிக்க, ஆடுகள் தானமாக வழங்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. பாண்டிய நாட்டில் சமண மதம் மிகச் சிறப்பான நிலையில் இறந்ததற்கு சமண பள்ளியே சிறந்த உதாரணமாக இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் குரண்டியில் திருக்காட்டாம் பள்ளி என்ற சமணப்பள்ளி கண்டறியப்பட்டது. தற்போது புல்லூரில் கண்டறியப்பட்ட சமணப்பள்ளி, மாவட்டத்தின் 2வது சமண பள்ளியாகும். குண்டாற்றின் மேல்கரையான, மேல உப்பிலிக்குண்டில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் கண்டறியப்பட்டது. தொடர்ந்து இப்பகுதியில் சமணம் சார்ந்த வரலாற்றுச் சான்றுகள் கிடைத்து வருவது சிறப்பான செய்தியாகும். இங்குள்ள 9 துண்டு கல்வெட்டுகளை முறையாக படி எடுத்து ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையாக ஆய்வு செய்தால் பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என, கூறினார்.